நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. மரணம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள் உரையாற்றினர். அவர்களைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பதில் அளித்தார்.
அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “கவன ஈர்ப்பு தீர்மானத்தில் இடம் பெற்ற பெயர்கள் மட்டுமின்றி அதில் இல்லாதவர்களும் உரையாற்றினீர்கள். அதற்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல் இந்த அரசு சட்டம் ஒழுங்கு விவகாரத்திலும் கடுமையாக இருக்கும் என்பதை எடுத்துரைக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், திருநெல்வேலி மாவட்டம் மூர்த்தி ஜகான் தைக்காரு பகுதியில் வசித்து வந்த ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் நேற்று அதிகாலை திருநெல்வேலி நகர தெற்கு மவுன் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத சில நபர்களால் வழிமறித்து தாக்கியதில்,சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜாகிர் ஹுசேன் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் திருநெல்வேலி மாநகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ் சுவடிகளை மின் பதிப்பாக்கம் செய்யுங்கள்! அரசுக்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள்
இதனிடையே இவ்வழக்கு தொடர்பாக திருநெல்வேலித் தொட்டி பாலத்தெருவைச் சேர்ந்த இருவர் திருநெல்வேலி குற்றவியல் 4ம் எண் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், மற்ற எதிரிகளை காவல்துறையின் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். கொலையுண்ட ஜாகிர் உசேன் கடந்த 8/1/2025 அன்று அவரது முகநூல் பக்கத்தில் ஒரு காணொளி வெளியிட்டுள்ளது பற்றியும், அதில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின் படி, மறைந்த ஜாகிர் உசேனுக்கும் அதே பகுதியைச் சார்ந்த கிருஷ்ணமூர்த்தி என்கிற தோபிக் என்பவருக்கும் நிலம் தொடர்பாக ஒரு பிரச்சனை பிரச்சனை இருந்து வருகின்றது. இடப்பிரச்சனை தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி என்கிற தோபிக் மற்றும் அவரது மைத்துனர் அக்பர் பாஷா ஆகியோர் ஜாகிர் உசேன் மீதும் அவர்கள் எதிர்தரப்பினர் மீதும் மாறி மாறி புகார் மனுக்களை அளித்துள்ளனர். இவற்றின் மீது காவல்துறையினரால் சமுதாய பதிவேடு எண்கள் அதாவது சிஎஸ்ஆர் எண்களும் வழங்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜாகிர் உசேன் அவர்கள் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டதை தொடர்ந்து ,ஏற்கனவே பதியப்பட்ட சிஎஸ்ஆர்ன் அடிப்படையில் அவரை அச்சுறுத்துவதாக குறிப்பிட்ட எதிர் தரப்பினரை திருநெல்வேலி மாநகர காவல் நிலையத்திற்கு அழைத்து காவல்துறையினர் விசாரித்துள்ளனர். மேற்படி விசாரணை நடைபெற்று வரும் சூழ்நிலையிலே நேற்றைய தினம் இந்த கண்டிக்கத்தக்க சம்பவம் நடைபெற்றுள்ளது. இக்கொலை வழக்கில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள், அவர்களுக்கு பின்னணியில் இருந்தவர்கள், அனைவர் மீதும் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு பாரபட்சம் இன்றி நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதை இந்த அவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டத்தை யாரும் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள இந்த அரசு அனுமதிக்காது. இந்த கொலை வழக்கில் மட்டுமல்ல எந்த குற்றத்தில் ஈடுபடுபவராக இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதையும் படிங்க: மாநிலங்களின் உரிமையை நீதிமன்றங்கள் தான் காக்கின்றன.. மெட்ராஸ் பார் அசோசியேஷன் கொண்டாட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!