உழவர்களின் உழைப்பிற்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தும் பொங்கல் திருநாளை மக்கள் உற்சாகமாகக் கொண்டாட வேண்டும் என்பதே ‘திராவிட மாடல்’ அரசின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக் கரும்புடன், குடும்பத்திற்கு ரூ.3,000 ரொக்கப் பணமும் வழங்கப்பட உள்ளது. இதற்காகத் தமிழக அரசுக்கு மொத்தம் ரூ.6,936,17,47,959 செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வேட்டி, சேலைகள் மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் திருநாளுக்கு முன்னதாகவே ரேஷன் கடைகள் வழியாக இவை அனைத்தும் விநியோகிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான 'TAPS' திட்டத்தை அறிவித்த கையோடு, தற்போது தமிழகத்தின் 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் 2,22,91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பெரும் பயன் பெறுவார்கள். பொங்கல் பண்டிகை என்பது குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து கொண்டாடும் பாரம்பரிய உன்னத விழா என்பதால், எவ்வித நிதி நெருக்கடியையும் பொருட்படுத்தாமல் இந்த தொகையை வழங்க அரசு முன்வந்துள்ளது.
வழக்கமான பொங்கல் தொகுப்பில் இடம்பெறும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் இனிப்பு கரும்பு ஆகியவற்றுடன், இம்முறை ரொக்கத் தொகையும் உயர்த்தி வழங்கப்படுவது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பண்டிகைக் காலங்களில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கவும், ஏழை எளிய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இந்த ரூ.3,000 ரொக்கம் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன்கள் அந்தந்த ரேஷன் கடைகள் மூலமாக விரைவில் வீடு வீடாக விநியோகிக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: “பொங்கல் வரை பொறுத்திருங்கள்!” – தவெக-வில் இணையப்போகும் முக்கியப் புள்ளிகள் யார்? செங்கோட்டையன் சூசகம்!
ரேஷன் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும், சமூக இடைவெளியைப் பின்பற்றிச் சீராக விநியோகிக்கவும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். வேட்டி மற்றும் சேலைகள் ஏற்கனவே மாவட்டத் தலைமையகங்களுக்குச் சென்றடைந்துள்ளதால், பொங்கல் தொகுப்புடன் அவையும் சேர்த்து வழங்கப்படும். புத்தாண்டுத் தொடக்கத்திலேயே அரசு ஊழியர்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவருக்கும் ‘அதிர்ஷ்ட மழை’ பொழிந்து வருவதால், தமிழகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. முதலமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பு 2026 தேர்தலுக்கான முன்னுதாரனமாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: “வீடு தேடி வரும் பொங்கல் டோக்கன்!” - அரசியல்வாதிகளுக்கு நோ எண்ட்ரி! தமிழக கூட்டுறவுத்துறை அதிரடி!