தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், வரும் ஜனவரி 17ஆம் தேதி (நாளை) நண்பகல் 12 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடி நகரில், சுதந்திரப் போராட்ட வீரரும் தியாகியுமான வே. இமானுவேல் சேகரனாரின் திருவுருவச் சிலையுடன் கூடிய புதிய அரங்கத்தைத் திறந்து வைக்கவுள்ளார். செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.3 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த அரங்கம், அவரது சமூகப் பங்களிப்பைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இமானுவேல் சேகரனார், ராமநாதபுரம் மாவட்டத்தின் செல்லூர் கிராமத்தில் 1924ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி வேதநாயகம் - ஞானசுந்தரி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். பரமக்குடியில் ஆரம்பக் கல்வியும், ராமநாதபுரத்தில் உயர்நிலைக் கல்வியும் பெற்ற அவர், இளம் வயதிலேயே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தார்.

1942இல் நடந்த 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் தீவிரமாகக் கலந்துகொண்டு மீண்டும் சிறை சென்றார். 1945ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். 1950இல் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக 'ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்' என்ற அமைப்பைத் தொடங்கி, சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தார்.
இதையும் படிங்க: திருவள்ளுவர் தின விழா: வள்ளுவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை..!! விருதுகள் வழங்கி கௌரவம்..!!
1954ஆம் ஆண்டு, இரட்டை குவளை முறைக்கும் தீண்டாமைக்கும் எதிராகப் போராடி, சமூக சீர்திருத்தத்தில் முக்கியப் பங்காற்றினார். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிய இமானுவேல் சேகரனார், 1957ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி மறைந்தார். அவரது நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக அரசு இந்த நினைவு அரங்கத்தை அமைத்துள்ளது. முதலமைச்சரின் அறிவிப்பின்படி, பரமக்குடி நகராட்சி இடத்தில் அமைக்கப்பட்ட இந்த அரங்கம், சுதந்திரப் போராட்ட வரலாற்றை இளைய தலைமுறைக்கு எடுத்துரைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர். இந்த நிகழ்ச்சி, தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் முக்கியமான தருணமாக அமையும். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக உழைத்த இமானுவேல் சேகரனாரின் பங்களிப்பு, சமூக நீதியின் அடையாளமாகத் திகழ்கிறது. அரசின் இத்தகைய முயற்சிகள், வரலாற்று நாயகர்களைப் போற்றுவதோடு, சமூக சமநீதியை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழகம் தந்த மாபெரும் ஹீரோ! பென்னிகுவிக் பிறந்தநாளில் முதல்வர் நெகிழ்ச்சி ட்வீட்!