மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (MGNREGA) பெயரை மாற்றுவதற்கும், அதன் நிதிப் பங்களிப்பைக் குறைப்பதற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மத்திய பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் காட்டமான பதிவைப் பதிவிட்டுள்ளார்.
மத்திய அமைச்சரவை டிசம்பர் 12-ஆம் தேதி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஒரு புதிய மசோதாவை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மசோதாவின்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. விக்ஷித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதத் திட்டம் (VBGRAMG) என மாற்றப்படுகிறது.
இதையும் படிங்க: "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் வெற்றியின் உச்சம் தெரியுமா?" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
இந்த மசோதாவில், 100 நாள் வேலைத் திட்டம் 125 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற சாதகமான அம்சமும் இருந்தாலும், மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மத்திய அரசின் இம்முடிவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்! 100% ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம். மேலும், இந்தத் திட்டம் தமிழ்நாட்டுக்குப் பாதகமாக அமைவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
"இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை படைத்துள்ளதற்காகவே நம் தமிழ்நாடு தண்டிக்கப்படவுள்ளது! வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்குமாம்!"
வறுமையின் பிடியில் இருந்து பல கோடிப் பேரை மீட்க உதவிய இந்தத் திட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு ஆணவத்துடன் அழிக்கப் பார்ப்பதாகக் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரங்களில் மத்திய அரசு பின்வாங்கியது போல, இந்தப் புதிய திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்:
3 வேளாண் சட்டம், சாதிவாரி கணக்கெடுப்பு போன்றவற்றில் எப்படிப் பின்வாங்கினீர்களோ, அதேபோல MGNREGA-வைச் சிதைக்கும் முயற்சியிலும் மக்கள் உங்களை நிச்சயம் பின்வாங்க வைப்பார்கள்! எனவே, மக்களின் சீற்றத்துக்கு ஆளாகாமல் இப்போதே VBGRAMG திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியது தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய அரசின் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஜி.எஸ்.டி.பி.-யில் 16% வளர்ச்சி! பொருளாதாரத்தில் தமிழ்நாடு முதலிடம்! RBI அறிக்கை பெருமிதம்!