மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், சிகர நிகழ்ச்சியான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை நடைபெறுகிறது. இந்தப் போட்டியைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்துகொண்டு கொடியசைத்துத் தொடங்கி வைக்கின்றார்.

வாடிவாசல் அமைந்துள்ள பகுதி முழுவதும் புதுப்பொலிவுடன் வர்ணம் பூசப்பட்டு தயார் நிலையில் உள்ளது. சுமார் 1000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் நவீன பார்வையாளர் மாடம் அமைக்கும் பணிகள் இறுதி நிலையை எட்டியுள்ளன. மைதானத்தைச் சுற்றிலும் தடுப்புக் கட்டைகள் அமைத்தல் மற்றும் காளைகள் வெளியேறும் பாதையைச் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி பங்கேற்கும் மதுரை கூட்டம் சென்னைக்கு மாற்றம்? பாஜக மேலிடம் தீவிர ஆலோசனை!

இந்தப் போட்டியில் சிறப்பாகச் செயல்படும் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் பிடிபடாத சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்குப் பரிசாக வழங்கப்படவுள்ள சொகுசு கார், டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் வாடிவாசல் மைதானத்தில் தற்போது வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, நாளை போட்டி நடைபெறும் போது கூட்ட நெரிசல் காரணமாக வாடிவாசலைப் பார்க்க முடியாத பொதுமக்கள், இன்றே குடும்பத்துடன் வந்து வாடிவாசல் முன்பு நின்று புகைப்படங்கள் எடுத்துச் செல்கின்றனர். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு அலங்காநல்லூர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டிஜிட்டல் மயமாகும் வாடிவாசல்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல்முறை LED ஸ்கோர்போர்டு அறிமுகம்!