சென்னை கிண்டியில் அமையவுள்ள உலகின் மிகப்பெரிய குழந்தைகளுக்கான மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு, இன்னும் ஒரு வாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், கிண்டி பகுதியில் பல்வேறு பிரம்மாண்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் முதியோர்களுக்கான பிரத்யேக மருத்துவமனை ஆகியவை பயன்பாட்டில் உள்ள நிலையில், அடுத்த கட்டமாக உலகமே வியக்கும் வகையிலான குழந்தைகள் மருத்துவமனை அமையவுள்ளது. இதற்கான விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், சைதாப்பேட்டையில் நடைபெற்ற உலக சாதனை கோலப்போட்டி பரிசளிப்பு விழாவில் அமைச்சர் இந்த முக்கியத் தகவலைப் பகிர்ந்து கொண்டார்.
தமிழர்களின் பாரம்பரியக் கலையான கோலத்தைப் போற்றும் வகையில் சைதாப்பேட்டையில் நடைபெற்ற பிரம்மாண்ட உலக சாதனை கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா வேளச்சேரியில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பரிசுகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கோலம் என்பது வெறும் அழகு மட்டுமல்ல, அது தமிழர்களின் தொன்மையான பண்பாட்டின் அடையாளம். தமிழகத்தில் பிறந்த இந்தக் கலைதான் இன்று இந்தியா முழுவதும் ரங்கோலி, அல்போனா எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது" எனச் சுட்டிக்காட்டினார். மேலும், கோலம் போடுவது என்பது ஒரு சிறந்த தியானம் மற்றும் யோகா பயிற்சி என்றும், அது பெண்களின் ஒருமுகத்தன்மையை அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: கோக் பவனில் கலைகட்டிய பொங்கல் விழா.. பாரம்பரிய உறி அடித்து மகிழ்ந்த ஆளுநர் குடும்பத்தினர்!
கடந்த ஆண்டு 34,000 பெண்கள் பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு 50,000-க்கும் மேற்பட்ட பெண்களைப் பங்கேற்கச் செய்து புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்ற அனைத்துப் பெண்களுக்கும் "உலக சாதனையாளர்" என்ற அங்கீகாரச் சான்றிதழ், வாழ்நாள் சொத்தாக இருக்கும் வகையில் பிரேம் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. போட்டியில் வென்றவர்களுக்கு முதல் பரிசாக வாஷிங் மெஷின், இரண்டாம் பரிசாக வெட் கிரைண்டர், மூன்றாம் பரிசாக மிக்ஸி மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் 'ஹாட் பேக்' ஊக்கப் பரிசாக வழங்கப்பட்டது. "சமத்துவம் பொங்கட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற முதல்வரின் தாரக மந்திரத்திற்கேற்ப இந்த விழா வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டதாக அமைச்சர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின்: ரூ.2,096 கோடி நலத்திட்டங்கள்! அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!