சென்னை கிண்டியில் உள்ள 'மக்கள் மாளிகை' எனப்படும் லோக் பவனில் 2026-ஆம் ஆண்டுக்கான பொங்கல் விழா இன்று மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோர் மாளிகை ஊழியர்களுடன் இணைந்து பொங்கல் வைத்து விழாவைக் கொண்டாடினர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் லோக் பவனில் பொங்கல் விழா கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விழா இன்று மாலை நடைபெற்றது. இதற்காக மக்கள் மாளிகை வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. தமிழகத்தின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் பிரம்மாண்ட பானை, மாட்டு வண்டி மற்றும் வைக்கோல் போர் ஆகியவை வைக்கப்பட்டு தத்ரூபமாக அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.
பொங்கல் விழாவில் பங்கேற்க வருகை தந்த ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன், பூரண கும்ப மரியாதை அளித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என். ரவி பாரம்பரிய முறைப்படி உறி அடிக்கும் விளையாட்டில் பங்கேற்று மகிழ்ந்தார். பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த பாரம்பரிய நெல் மற்றும் பயிர் வகைகளைத் தனது குடும்பத்தினருடன் அவர் ஆர்வமுடன் பார்வையிட்டார்.
இதையும் படிங்க: “கொண்டாட்டம் ஆரம்பம்!” இன்று 3,000 ரூபாயுடன் பொங்கல் பரிசு! தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
விழாவின் முக்கிய நிகழ்வாக, மக்கள் மாளிகை ஊழியர்களுடன் ஆளுநர் தம்பதியினர் இணைந்து பொங்கல் பானையில் அரிசி மற்றும் வெல்லமிட்டு, "பொங்கலோ பொங்கல்" என முழங்க பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கி வந்த வேளையில் அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டித் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, மாளிகை ஊழியர்களுக்குக் கரும்புகளை வழங்கிய ஆளுநர், அனைவருக்கும் தனது பொங்கல் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். இந்த விழாவில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், பல்வேறு துறை சார்ந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தனர்.
இதையும் படிங்க: "நாளை காலை 8 மணி.. மிஸ் பண்ணிடாதீங்க!" பொங்கல் ஸ்பெஷல் ரயில்களுக்கான முன்பதிவு தொடக்கம்!