தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரக் களத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு மிகக் கடுமையான அரசியல் தடுமாற்றம் வந்துவிட்டதாகவும், மேடைகளில் எதையோ பேச வந்து எதையோ உளறிவிட்டுச் செல்வதாகவும், வரவிருக்கும் இடைத்தேர்தல் முடிவுகளே இதற்கான இறுதிப் பதிலாக அமையும் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மிகக் காரசாரமாக விமர்சித்துள்ளார்.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தல் களம் மற்றும் ஆளுங்கட்சியான தவெகவின் நிர்வாகத் தோல்விகள் குறித்துப் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைத்தார்.
அப்போது தேர்தல் களம் குறித்துப் பேசிய அவர், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் அபார வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது; அதேபோல், தாராபுரம் தொகுதியிலிருந்தும் கள நிலவரப்படி மிகவும் சாதகமான நல்ல செய்திகள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கின்றன; அங்குத் தேசிய ஜனநாயகக் கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்யும் என்று அழுத்தமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்: தலா ரூ.30 லட்சம் பரிசு அறிவித்தார் முதல்வர் விஜய்!

தொடர்ந்து முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரப் பாணியை விமர்சித்த அவர், முதலமைச்சர் விஜய்க்கு இப்போது அரசியல் ரீதியாகப் பெரும் தடுமாற்றம் வந்துவிட்டது; தாராபுரம் தேர்தல் பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய பேச்சே அதற்கு அப்பட்டமான சான்று; எதையோ பேச வேண்டும் என்று குறிப்பெடுத்து வந்து, மேடையில் நின்றுகொண்டு சம்பந்தமே இல்லாமல் எதையோ உளறிவிட்டுச் செல்கிறார்; மக்களின் நாடித் துடிப்பு என்னவென்பதே அவருக்குப் புரியவில்லை; இந்த இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது அவரது இந்தத் தடுமாற்றத்திற்கான நிஜமான விடை தெரியவரும் என்று சாடினார்.
தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளைக் கிழித்துத் தொங்கவிட்ட நயினார் நாகேந்திரன், தேர்தல் நேரத்தில் வாய் கூசாமல் சொன்னீர்களே, அந்த வாக்குறுதிப்படி மகளிருக்கு மாதம் ரூ.2,500 கொடுத்துவிட்டீர்களா? முதலமைச்சராகப் பதவியேற்றதும் எந்தக் கோப்பில் உங்கள் முதல் கையெழுத்தைப் போட்டீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஆவின் பால் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துவிட்டது; மின் கட்டணமும் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டு மக்கள் தலையில் பேரிடியாக இறங்கியுள்ளது; வீடுகளுக்கு தடையில்லா மின்சாரம் கூட வழங்க முடியாத சூழலில் ஆட்சி நடக்கிறது; இதற்குப் பதில் சொல்ல முடியாத முதலமைச்சர் மேடைகளில் வெற்றுப் பேச்சு பேசித் திசைதிருப்பி வருகிறார் என்று குற்றம்சாட்டினார்.
தமிழக மக்கள் தவெகவின் போலி நாடகங்களையும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும் மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டுவிட்டனர் என்றும், ஆளுங்கட்சியின் மக்கள் விரோதப் போக்கிற்கு இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்கள் சம்மட்டி அடி கொடுப்பார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாளை மதுராந்தகத்தில் களமிறங்கும் விஜய்..!! பிரம்மாண்ட ரோடு ஷோ.. தவெக வேட்பாளருக்கு ஆதரவு!!