கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தமிழ்நாட்டின் முக்கியமான அரசு சுகாதார நிறுவனங்களில் ஒன்றாகும். இது கோவை மாவட்டத்திற்கு மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் கேரளாவிலிருந்து வரும் ஏராளமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது. தினசரி ஆயிரக்கணக்கான உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் இங்கு சிகிச்சை பெறுகின்றனர், குறிப்பாக சர்க்கரை நோய் போன்ற நீண்டகால நோய்களுக்கான சிகிச்சைக்கு இது பிரபலமான இடமாக உள்ளது.
இந்த நிலையில், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர், காலில் ஏற்பட்ட பிரச்சனைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் நேரத்தில், நடக்க முடியாத நிலையில் சக்கர நாற்காலி கோரியதாக தெரிகிறது. மருத்துவமனையின் சூப்பர்வைசர்கள் சக்கர நாற்காலி அல்லது ஸ்ட்ரெச்சர் வழங்க மறுத்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

பிறகு அவரது மகன், தனது தந்தையை கையால் தூக்க முடியாமல், கடும் சிரமத்துடன் இழுத்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக சம்பவத்திற்கு காரணமான இரு சூப்பர்வைசர்களை சஸ்பெண்ட் செய்தனர். இந்த நிலையில், வீல் சேர் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. மற்றொரு நோயாளியை வீல் சேரில் அழைத்துச் சென்றதால் 15 நிமிடம் தாமதம் ஆனதாகவும், வீல் சேர் வழங்கப்பட்ட போதிலும் ஏற்க மறுத்து நோயாளியின் உறவினர் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடடா! இதுதான் உலகம் போற்றும் மருத்துவ கட்டமைப்பா? வறுத்தெடுத்த நயினார் நாகேந்திரன்
செயற்கையாக குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர் என்றும் மருத்துவமனையை குற்றம்சாட்டும் நோக்கில் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது என்றும் மருத்துவமனை மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சம்பளம் வேணுமா? இந்தா வாங்கிக்கோ... ஊழியர்களை பெல்டில் விளாசிய முதலாளி..!