கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தமிழ்நாட்டின் முக்கியமான அரசு சுகாதார நிறுவனங்களில் ஒன்றாகும். இது கோவை மாவட்டத்திற்கு மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் கேரளாவிலிருந்து வரும் ஏராளமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது. தினசரி ஆயிரக்கணக்கான உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் இங்கு சிகிச்சை பெறுகின்றனர், குறிப்பாக சர்க்கரை நோய் போன்ற நீண்டகால நோய்களுக்கான சிகிச்சைக்கு இது பிரபலமான இடமாக உள்ளது.
இந்த நிலையில், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர், காலில் ஏற்பட்ட பிரச்சனைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் நேரத்தில், நடக்க முடியாத நிலையில் சக்கர நாற்காலி கோரியதாக தெரிகிறது. மருத்துவமனையின் சூப்பர்வைசர்கள் சக்கர நாற்காலி அல்லது ஸ்ட்ரெச்சர் வழங்க மறுத்துவிட்டனர். பிறகு அவரது மகன், தனது தந்தையை கையால் தூக்க முடியாமல், கடும் சிரமத்துடன் இழுத்துச் செல்ல நேர்ந்தது.

இந்த அவலநிலையின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக சம்பவத்திற்கு காரணமான இரு சூப்பர்வைசர்களை சஸ்பெண்ட் செய்தனர். இந்த சம்பவத்திற்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவை அரசுப் பொது மருத்துவமனையில் 2 மணி நேரம் காத்திருந்தும் சக்கர நாற்காலி வழங்கப்படாததால், நோயுற்ற தந்தையை அவரது மகன் இழுத்துச் சென்ற காணொளி மனதைப் பதைபதைக்க வைப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: தாமிரபரணியை தலைமுழுகிடுச்சா திமுக? நயினார் சரமாரி கேள்வி
மலைப் பகுதிகளில் சாலை வசதியின்றி நோயாளிகளைத் தூளி கட்டித் தூக்கிச் செல்வதில் தொடங்கி, பல்நோக்கு மருத்துவமனையில் நோயாளிகளை இழுத்துச் செல்வது வரை மருத்துவத்திற்காக மக்களை அலைக்கழிப்பது தான் உலகமே போற்றும் மருத்துவக் கட்டமைப்பா இன்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார். ஆட்சி முடியும் தருவாயிலாவது, ஆரவார வெற்று விளம்பரத்தை விடுத்து, அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்துங்கள் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அப்படி ஒன்னும் வருத்தமில்ல! நயினார் நல்ல நண்பர்.. மனம் திறந்த டிடிவி..!!