சென்னை வள்ளலார் நகர் பகுதியில் இன்று இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாகப் பதவிநீக்கம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தின. தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இதேபோன்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், சென்னையில் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் தொண்டர்கள் திரண்டு கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் எனப்படும் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையின் மூலம் கோடிக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினர். இந்தச் செயல்பாடு ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றும், தலைமைத் தேர்தல் ஆணையர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்புகளைப் புறக்கணித்து தன்னிச்சையாக முடிவுகளை எடுத்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

கடந்த பத்து மாதங்களில் குறைந்தது பதினான்கு முறை எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனைகள் பதிவு செய்யப்பட்ட போதிலும், அவை கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பது அவர்களின் முக்கிய புகாராக இருந்தது.ஆர்ப்பாட்டக்காரர்கள், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளதாகக் கூறினர். எஸ்.ஐ.ஆர். செயல்முறை மூலம் உண்மையான வாக்காளர்கள் பெருமளவில் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகவும், இது மத்திய ஆளும் கட்சிக்குச் சாதகமாக அமைக்கப்பட்ட சதியாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.
இதையும் படிங்க: ஞானேஷ் குமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு... சட்ட நடவடிக்கைக்கு தொடர் வலியுறுத்தல்... உச்ச நீதிமன்றத்தை நாடிய விவகாரம்..!!
தலைமைத் தேர்தல் ஆணையர் உடனடியாகப் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும், தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் தற்போதைய சட்டம் திருத்தப்பட்டு, முன்னர் இருந்த சுதந்திரமான தேர்வு முறை மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: ஞானேஷ் குமாருக்கு எதிர்ப்பு... அக்டோபர் 2 முதல் நாடு தழுவிய போராட்டம்..! CJP தலைவர் அபிஜித் தீப்கே அறிவிப்பு.!!