காங்கிரஸ் இயக்கம் ஒருபோதும் யாரையும் ஏமாற்றாது; யாருடைய முதுகிலும் குத்தும் பழக்கம் காங்கிரசுக்குக் கிடையாது. தமிழ்நாட்டில் பாஜக குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதையோ அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்படுவதையோ தடுத்து நிறுத்தவே தேர்தலுக்குப் பின் தவெக அரசுக்கு ஆதரவளித்தோம் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய கே.சி. வேணுகோபால், தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகத்திடமிருந்து ஆட்சி அதிகாரம் மற்றும் பதவிகளில் பல சலுகைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், கூட்டாட்சித் தத்துவத்திற்காகவும் சமூக நீதிக்காகவும் நாம் திமுக கூட்டணியில் நீடிக்கவே விரும்பினோம்.
ஆனால், தேர்தலுக்குப் பிறகு உருவான அசாதாரண அரசியல் சூழலில், விஜய்க்கு ஆதரவு கொடுக்காவிட்டால் தமிழகத்தில் பாஜகவின் மறைமுக ஆட்சி அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி வந்திருக்கும். பாஜகவின் உள்நுழைவைத் தடுக்கவே இந்த தீர்க்கமான முடிவை எடுத்தோம் எனக் குறிப்பிட்டார். மேலும், கட்சியில் மாநில, மாவட்ட அளவில் பலர் 'அலங்கார பொம்மைகளாக' மட்டுமே செயல்படுவதாகச் சாடிய அவர், இனி தீவிரமாகக் களப்பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே பதவிகள் வழங்கப்படும் என எச்சரித்தார்.
இதையும் படிங்க: வந்தே மாதரம் விவகாரம்! காங்கிரஸ் தியாகிகளை அவமதிக்கிறது! அமித் ஷா சரமாரி குற்றச்சாட்டு!

இதனைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகப் பொறுப்புகள் விரைவில் அதிரடியாக மாற்றி அமைக்கப்பட உள்ளதாக அறிவித்தார். கட்சியில் எவ்வித கோஷ்டிப் பூசலும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், கடந்த கால நிகழ்வுகளைப் பேசுவதை விடுத்து, வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகக் காங்கிரஸ் தனது உண்மையான கள பலத்தை நிரூபிக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதனிடையே, பொதுக்குழு கூட்டத்தில் கே.சி. வேணுகோபால் தனது உரையை முடித்த உடனேயே அரங்கில் இருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் அவசர அவசரமாகக் கலைந்து செல்லத் தொடங்கினர். இதனால் அதிருப்தியடைந்த மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், முன்னாள் தலைவர்களும் நானும் பேச வேண்டியுள்ளது; ராகுல் காந்தி வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர்கள் அரங்கில் அமருங்கள், மற்றவர்கள் ரயிலைப் பிடித்து ஊருக்குப் போகலாம் என மைக்கில் வெளிப்படையாகக் கூறியும் தொண்டர்கள் வெளியேறினர்.
இதன் காரணமாக, முன்னாள் தலைவர்கள் கே.எஸ். அழகிரி, செல்வப் பெருந்தகை மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோர் உரையாற்றிய போது காமராஜர் அரங்கம் வெறிச்சோடிக் காணப்பட்டதுடன், வெளியே காங்கிரஸ் கட்சி சார்பில் வழங்கப்பட்ட இலவச பைகளுக்காகத் தொண்டர்கள் முண்டியடித்து அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 35 வருஷமாச்சு! எனக்கும் பிரியங்கா காந்திக்கும் மட்டுமே தெரியும் அது! சோனியா குறித்து ராகுல்காந்தி பதிவு!