அண்மைக்காலங்களாக தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் மூலம் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தெருநாய்கள் நடந்து செல்வோரை துரத்துவதும் கடிப்பதும் அதிகரித்து வருகிறது. சிறுவர் சிறுமிகளும் இதில் பாதிக்கப்படுகினறனர். இதுஒருபுறம் என்றால் மறுபுறம் வளர்ப்பு நாய்களும் உரிமையாளரின் பேச்சை கேட்காமல் சாலை வாக்கிங் செல்லும் போது பொதுமக்களை கடித்து விடுகின்றன. சில நேரங்களில் ஆக்ரோஷமான நாய்கள் கடிக்க தொடங்கினால் அதனை உரிமையாளரே தடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டில் 3.19 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டனர். 19 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்தனர். இதுவே கடந்த 2024 ஆம் ஆண்டில் 4.80 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டனர். 43 பேர் ரேபிஸால் உயிரிழந்தனர். 2025 ஆம் ஆண்டை பொறுத்தவரை கடந்த ஜனவரி முதல் தற்போதுவரை சுமார் 1.50 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 3 பேர் ரேபிஸ் நோய் பாதித்து உயிரிழந்தனர். மறுபக்கம் வளர்ப்பு நாய்களினால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகளவு உள்ளது. கடந்த ஆண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் தலையை வளர்ப்பு நாய் கடித்ததில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல் நலம் தேறினார்.

இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனால் 23 வகை நாய்களுக்கு இறக்குமதி செய்யவும், இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்யவும் அரசு தடை விதித்திருந்தது. அண்மையில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை வளர்ப்பு நாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தெருநாய்களை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி தரப்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்தன. இந்த நிலையில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களை கட்டுப்படுத்த புதிதாக 10 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி தரப்பில், தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல் வெறிநாய்க்கடி நோய் பரவுவதை தடுக்கும் வகையில் திருவிக நகர் மண்டலம் - புளியந்தோப்பு, தேனாம்பேட்டை மண்டலம் - லாயிட்ஸ் காலனி, கோடம்பாக்கம் மண்டலம் - கண்ணம்மாபேட்டை, சோழிங்கநல்லூர் மண்டலம் - சோழிங்கநல்லூர், ஆலந்தூர் மண்டலம், - மீனம்பாக்கம் ஆகிய 5 இடங்களில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: கட்டுமான பணிகளுக்கு முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள்! சென்னை மாநகராட்சி கிடுக்கிப்பிடி..!

அதேபோல் புளியந்தோப்பு, திருவிக நகர், நுங்கம்பாக்கம், லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை மற்றும் மீனம்பாக்கம் ஆகிய 6 இடங்களில் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி மற்றும் கண்ணம்மாபேட்டை ஆகிய இனக்கட்டுப்பாட்டு மையங்களில் தலா 30 நாட்களுக்கும், மீனம்பாக்கம் மையத்தில் நாளொன்றுக்கு 15 தெருநாய்களுக்கும், சோழிங்கநல்லூர் மையத்தில் 10 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தெருநாய்களை பிடிக்கும் பணிகளுக்கான 16 நாய்கள் பிடிக்கும் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும் நாய்களை பிடிக்கும் வலைகளுடன் சராசரியாக 5 நாய் பிடிக்கும் பணியாளர்கள் என 78 பணியாளர்கள், கருத்தடை அறுவை சிகிச்சை பணிகளை மேற்கொள்ள 23 கால்நடை உதவி மருத்துவர்கள், கருத்தடை அறுவை சிகிச்சையின் தரப்பினை உறுதி செய்வதற்காக 4 கால்நடை மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணியில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 157 தெருநாய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 66,285 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளும், 66,285 தெருநாய்கள் மற்றும் 41,917 செல்லப்பிராணிகள் என மொத்தம் 1,08,202 நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. தெருநாய்களைப் பிடித்தல், கருத்தடை செய்தல், வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் மீண்டும் விடுவித்தல் ஆகியவற்றை முறையாக கண்காணிப்பதற்காக ஒவ்வொரு நாய்க்கும் மைக்ரோசிப் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் பணி முன்னோட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை மாநகராட்சியில் உள்ள 1.80 லட்சம் தெருநாய்களுக்கும் ரூ.3 கோடி செலவில் ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்துதல் பணி ஜுன் மாதம் முதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வாகன ஓட்டிகளுக்கு எமனாகும் தெரு நாய்கள்.. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய CM மு.க.ஸ்டாலின்!!