கோவை நவ இந்தியா அருகே இந்துஸ்தான் மருத்துவமனை செயல் பட்டு வருகின்றது. மருத்துவமனை வளாகத்திலேயே இந்துஸ்தான் ஹெல்த் அண்ட் சயின்ஸ் பாரா மெடிக்கல் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. நேற்று மருத்துவமனையில் 4வது மாடியில் இருந்து மாணவி அனுப்பிரியா என்பவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாணவியின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மாணவியின் உடலை வாங்க மறுத்து மாணவியின் பெற்றோரும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது கல்லூரி நிர்வாகத்தில் இருந்து தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அப்போதுதான் உடலை வாங்குவோம் என மாணவியின் பெற்றோர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: கணவரின் தினக் குடி… மகளின் உறவை என் மருமகனுடன் ஓடிச்சென்று சரி செய்துவிட்டேன்- மாமியார் விளக்கம்

இதனை தொடர்ந்து இந்துஸ்தான் கல்லூரியின் முதல்வர் மணிமொழி மற்றும் ஆசிரியர்கள் லாவண்யா, உமா ஆகியோர் மாணவியின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கல்லூரி தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனையடுத்து ஆவேசம் அடைந்த மாணவர்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் மாணவர்களை சமரசப்படுத்தினர். அப்பொழுது கல்லூரியின் முதல்வர் மணிமொழி மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தினர்.

இதனிடையே இந்துஸ்தான் கல்லூரி முதல்வர் மணிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நேற்று மாலை மூன்று மணி அளவில் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது எனவும், இரண்டு மாணவர்களை மட்டும் விசாரிக்கவில்லை, இன்டென்ஷிப் வந்த பிற மாணவர்கள் மற்றும் கல்லூரியில் வேலை செய்பவர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது என தெரிவித்தார்.
புகார்கள் வரும் போது வழக்கமாக நடத்தப்படக்கூடிய விசாரணை தான் இது எனவும், அந்த மாணவிதான் மாற்றி மாற்றிதான் பேசினார், ஆனால் அதைப் பற்றி நாங்கள் பெரிதாக எதுவும் எடுக்கவில்லை என தெரிவித்தார். மாணவியிடம் ஒரு விளக்க கடிதம் மட்டும் கேட்டோம் எனவும், பெற்றோரிடம் சொல்வதற்கு கடிதம் வாங்கி வைத்தோம் எனவும் தெரிவித்தார்.

மருத்துவமனையில் சிசிடிவியில் காட்சி தொடர்பாக மருத்துவமனையை சேர்ரந்த பிற துறை ஊழியர்கள் மாணவியிடம் பேசினார்கள் என தெரிவித்த அவர், மாணவியை நாங்கள் குற்றவாளி என சொல்லவில்லை எனவும் , மாணவர்களை நாங்கள் எப்பொழுதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார். பெற்றோரிடம் மாணவியின் செயல்பாடு குறித்து சொல்வதற்காக அவர்களையும் வர சொல்லியிருந்தோம் என தெரிவித்த அவர், பெற்றோர்களும் விசாரணைக்கு வருவதாக தான் சொல்லி இருந்தார்கள் என தெரிவித்தார்.

6 மணி நேரம் எல்லாம் விசாரிக்கவில்லை , மூன்று மணிக்கு தான் எனக்கு இந்த தகவல் கிடைத்தது என தெரிவித்த முதல்வர் மணிமொழி, அந்த வகுப்பில் இருக்கிற அனைத்து மாணவர்களையும் அழைத்து ஒரு அறையில் அமர வைத்து விசாரித்தோம் எனவும் தெரிவித்தார்.இது என்னுடைய விசாரணை கிடையாது, மருத்துவமனையில் காணாமல் போனதால் மருத்துவமனை தரப்பில் விசாரித்தார்கள் என தெரிவித்த அவர், என்னுடைய மாணவி என்பதால் எனது கவனத்திற்கு கொண்டு வந்தார்கள் எனவும் தெரிவித்தார்.
கல்லூரியில் இருந்து எதுவும் காணாமல் போகவில்லை, நான் அவரிடம் விசாரிக்கவும் இல்லை, மருத்துவமனை தரப்பில்தான் விசாரித்தார்கள் எனவும் கல்லூரியின் முதல்வர் மணிமொழி தெரிவித்தார். இதனிடையே இரு தரப்பினரிடமும் காவல்துறையினர் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓடும் பஸ்ஸில் பாலியல் தொல்லை.. சில்மிஷம் செய்த கண்டக்டர்.. ஐ.டி பெண்ணின் அதிர்ச்சி வைத்தியம்..!