கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ஆலப்பாக்கம் ரயில்வே கேட்டில் நேற்று காலை 7:45 மணியளவில் நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்து தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் இரண்டு மாணவர், ஒரு மாணவி உயிரிழந்தனர். நேற்று காலை விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பயணிகள் ரயில் செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே சென்றபோது தனியார் பள்ளி வேன் ரயில்வே கேட்டை கிராஸ் செய்த போது விபத்து ஏற்பட்டது. ரயில்வே கேட் மூடாததால் ரயில் வரவில்லை என நினைத்த பள்ளி வேன் ஓட்டுநர் வாகனத்தை இயக்கி சென்றுள்ளார். இந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்தில் பள்ளி வேன் சுமார் 50 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நசுங்கியது.

அதில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் உள்ளிட்டோர் தூக்கி வீசப்பட்டனர். இதில் தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த நிவாஸ் என்ற 12 வயது மாணவன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சாருமதி என்ற 16 வயது மாணவியும், செழியன் என்ற 15 வயது மாணவனும் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: வாயில் மண்ணை கொட்டி.. 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!
இந்தக் கோர விபத்துக்கு காரணம் கேட் கீப்பர் தான் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அப்பகுதி மக்கள் வைத்தனர். விபத்துக்கு காரணமாக கூறப்படும் ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை எப்போது சென்று கூப்பிட்டாலும் கண்களை துடைத்து கொண்டு தூங்கிய நிலையிலேயே வெளியே வருவார் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். பல நேரத்தில் ரயில் வருவதை கவனிக்காமல் செல்போனில் வீடியோ பார்ப்பதை அவர் வழக்கமாக வைத்திருந்ததாகவும் பொதுமக்கள் கூறினர். தொடர்ந்து அந்த பகுதி மக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்து, அவர்களில் சிலர், பங்கஜ் சர்மாவுக்கு தர்ம அடிகொடுத்தனர்.

பொது மக்களின் குற்றச்சாட்டு ரயில்வே துறையின் விளக்கத்திற்கு முரணாக இருக்கும் நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே விபத்து தொடர்பாக பள்ளி வேன் ஓட்டுனரும், மாணவரும் வாக்குமூலம் அளித்தனர். இது தொடர்பாக பேசிய ஓட்டுனர், தான் கேட் கீப்பரிடம் எதுவும் பேசவில்லை என்றும் தண்டவாளத்தை கடப்பது தொடர்பாக அவரிடம் எதுவும் கூறவில்லை என்றும் வாக்குமூலம் அளித்தார். கேட் கீப்பரை தான் பார்க்கவே இல்லை என்றும் ரயில்வே கேட் மூடப்படாமல் திறந்தேதான் இருந்தது எனவும் கூறினார்.

பள்ளி வேன் ஓட்டுநர், பாதிக்கப்பட்ட மாணவர், பொதுமக்கள் என அனைவரும் கொடுத்த வாக்குமூலம் கேட் கீப்பருக்கு எதிராக உள்ள நிலையில், ரெயில்வே கேட்டை மூடாமல் அலட்சியமாக இருந்ததாக கைது செய்யப்பட்ட கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #BREAKING கடலூர் ரயில் விபத்து - திடீர் திருப்பமாக வெளியான முக்கிய தகவல்...!