கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ஆலப்பாக்கம் ரயில்வே கேட்டில் இன்று காலை 7:45 மணியளவில் நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்து தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளியின் வேன், மாணவர்களை ஏற்றிச் சென்றபோது, ஆளில்லாத ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், உயிரிழந்தவர்களுக்கும் காயம் அடைந்தவர்களுக்கும் தமிழக அரசின் சார்பிலும், ரயில்வே துறையின் சார்பிலும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே தரப்பில் பல்வேறு விளக்கம் கொடுக்கப்பட்ட நிலையில், கேட் கீப்பர் தான் விபத்துக்கு காரணம் என ஓட்டுனரும், பள்ளி மாணவர் ஒருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: கோர விபத்தில் பரிதாபமாக போன உயிர்கள்.. உயிரிழந்த மாணவர்களுக்கு முதல்வர் இரங்கல்..! ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!

இந்த நிலையில், பள்ளி வேன்மீது ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த செய்தி வேதனை அளிப்பதாகவும் இந்த துயர்மிகு வேளையில் குடும்பங்களின் கரம் பற்றி தனது ஆறுதலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைந்து நலம் பெற வேண்டும் என்று வேண்டுவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து மத்திய அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கனிமொழி எம்பி முன் வைத்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 68,584 கி.மீ தூரம் ரயில்வே வழித்தடத்தில் வெறும் 1,548 கி.மீ மட்டுமே 'கவாச்' பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது என்பதைப் பலமுறை சுட்டிக்காட்டி உள்ளதாகவும் இத்தனை விபத்துகள் நேர்ந்த பின்னும், ஒன்றிய அரசுக்கு இதில் துளியளவும் கவலை இல்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

கவாச் என்பது இந்திய ரயில்வேயால் உருவாக்கப்பட்ட ஒரு தானியங்கி ரயில் மோதல் தடுப்பு முறை. இது ரயில்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு அதிநவீன தொழில்நுட்பம். இது ரயில் விபத்துகளை, குறிப்பாக மோதல்களைத் தடுப்பதற்கு உதவுகிறது. "கவாச்" என்ற வார்த்தை இந்தியில் கவசம் அல்லது பாதுகாப்பு என்று பொருள்படுகிறது. கவாச் முறைமை ரயில்களுக்கு இடையேயான தூரம், வேகம் மற்றும் தண்டவாள நிலை ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்கிறது. ரயில் ஒரு ஆபத்தான நிலையை அடையும்போது, கவாச் தானாகவே பிரேக் அமைப்பை இயக்கி ரயிலை நிறுத்துகிறது. இது ரயில் ஓட்டுநரின் தவறுகளையும், மனித பிழைகளையும் சரிசெய்ய உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #BREAKING ரயில் மோதி சுக்கு நூறான பள்ளி வேன்.. நெஞ்சை உலுக்கும் கோரம்.. 2 மாணவர்கள் உட்பட 4 பேர் பலி..!