தமிழகத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு தலை தூக்கி உள்ளது. சிலிண்டர்களை முன்பதிவு செய்துவிட்டு காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சிலிண்டர்கள் பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கும் போதிலும் பல இடங்களில் இது போன்ற முறைகேடுகள் நடைபெறுகிறது.
இந்த நிலையில், திருப்பூரில் முறையான அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். திருப்பூர் சாமுண்டிபுரம் அருகே தாய் மூகாம்பிகை நகரில், முறையான அனுமதியின்றி சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட வழங்கல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சரவணன், தனி வட்டாட்சியர் குடிமைப்பொருள் ராகவி தலைமையிலான அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: ஜாடிக்கு ஏத்த மூடி..! சிலிண்டர் தட்டுபாட்டால் சிக்கி தவிக்கும் மக்கள்... பாஜக, அதிமுகவை கிழித்த முதல்வர் ஸ்டாலின்..!!
அப்போது அங்கு முறையான அனுமதியின்றி 200க்கும் மேற்பட்ட வணிக மற்றும் வீட்டு சிலிண்டர்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், மேற்கண்ட சிலிண்டர்கள் விநாயகா கேஸ் ஏஜென்சிக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களை பறிமுதல் செய்து ஏஜன்சியின் உரிமையாளர் மோகன் என்பவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலிண்டர்கள் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில் சிலிண்டர்களை பதுக்கி வைத்து இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சிலிண்டர் தட்டுப்பாடு... அல்வா உள்ளிட்ட இனிப்பு தயாரிப்புகளை நிறுத்திய நிறுவனங்கள்..!!