தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் ஏற்பட்டுள்ள மின்தடைகள் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளன. வழக்கமாக இரவு நேரங்களில் மட்டும் அவ்வப்போது நிகழும் தடைகள், இப்போது பகல் வேளையிலும் மணிக்கணக்கில் நீடிப்பதால் பொதுமக்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது. பலர் இதை பழைய “ஆற்காடு வீராசாமி காலத்து மின்வெட்டு” நிலைக்கு ஒப்பிட்டு சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர்.
செப்டம்பரில் வழக்கமாக வெயில் தணிய வேண்டும். ஆனால் இந்த ஆண்டு தொடர்ந்து கொளுத்தும் வெப்பம் காரணமாக ஏசி, ஃபேன் பயன்பாடு உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் தினசரி தேவை சுமார் 16,000 மெகாவாட்டாக இருந்தது. இப்போது அது 19,000 முதல் 20,000 மெகாவாட் வரை உயர்ந்துள்ளது. இதனுடன் தென் மாவட்டங்களில் உள்ள காற்றாலைகளின் உற்பத்தி சுமார் 1,500 மெகாவாட் அளவுக்கு சரிந்துள்ளது.
இதனால் ஏற்பட்ட இடைவெளியை நிரப்ப அரசு வெளிச்சந்தையில் ஒரு யூனிட் 20 ரூபாய் வரை செலவழித்து ஆயிரக்கணக்கான மெகாவாட் மின்சாரத்தை அவசரமாக வாங்கியுள்ளது.பகல் நேரத்தில் அதிக சுமை மற்றும் வெப்பத்தால் துணை மின் நிலையங்கள், மின்மாற்றிகள் அடிக்கடி பழுதடைகின்றன. இதனால் ஒரு மணி முதல் இரண்டு மணி நேரம் வரை கட்டாயத் தடைகள் ஏற்படுகின்றன. வீட்டுப் பெண்கள் சமையல் உபகரணங்களைப் பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.
இதையும் படிங்க: அண்ணா அறிவாலயத்தை வாடகைக்கு விடணுமா.? தறுதலை அமைச்சர்கள்... ஆ.ராசா பேச்சால் பரபரப்பு.!!
முதியவர்களும் சிறு குழந்தைகளும் அனல் காற்றில் அவதிப்படுகின்றனர். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் வீட்டு மோட்டார்கள் இயங்காததால் குடிநீர் தட்டுப்பாடும் தலைதூக்கியுள்ளது. வெல்டிங் பட்டறைகள், தையல் கடைகள், மாவு மில்கள் போன்ற சிறு தொழில்கள் முடங்கி வருமான இழப்பைச் சந்திக்கின்றன. வீட்டிலிருந்து வேலை செய்யும் ஐடி ஊழியர்களும் இணையத் துண்டிப்பால் பாதிக்கப்படுகின்றனர்.
பராமரிப்புப் பணிகளுக்காக காலை 9 முதல் மாலை 5 வரை அறிவிக்கப்படும் தடைகள் பல இடங்களில் முன்கூட்டியே மக்களுக்குத் தெரியாமல் போகிறது. பணி முடிந்த பிறகும் மீண்டும் பழுது எனக் கூறி தடை தொடர்வதும் வாடிக்கையாகிவிட்டது. மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், காற்றாலை உற்பத்தி குறைவும் அதிக தேவையுமே முக்கிய காரணம் என விளக்கியுள்ளார். மாநில அளவில் பெரிய பற்றாக்குறை இல்லை என்றும், உள்ளூர் விநியோகப் பழுதுகளே தடைக்குக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
வடகிழக்குப் பருவமழைக்கு முன் சேதமடைந்த கம்பங்கள், ஒயர்கள், டிரான்ஸ்பார்மர்களைச் சரிசெய்ய மாவட்ட வாரியாகத் தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்தங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் எதிர்பார்ப்பது வெறும் தற்காலிகத் தீர்வுகள் அல்ல. அனல் மின் நிலையங்களை முழு திறனில் இயக்குவதும், விநியோகக் கட்டமைப்பை விரைந்து மேம்படுத்துவதுமே நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதே அவர்களின் குரலாக உள்ளது.
இதையும் படிங்க: மின்துறை முறைகேடு.! செந்தில் பாலாஜி vs நிர்மல் குமார்..!! பேரவையில் பரபரப்பு விவாதம்.!