சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாங்கோட்டை கிராமத்தில் மேகா மெட்டல் குவாரி இயங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த குவாரியில், அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். சுமார் 450 அடி ஆழம் கொண்ட இந்த குவாரியில் இருந்து வெட்டப்படும் கற்களை கொண்டு எம் சாண்ட் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த தொழிலாளர்கள், கற்களை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே குவாரியில் பாறையை உடைக்க வெடி வைக்கப்பட்டது. பயங்கர சத்தத்துடன் வெடித்ததை அடுத்து அங்கு மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் அங்கே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கினர்.

இதை கண்ட சக தொழிலாளர்கள் மண் சரிவில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க முயற்சித்துள்ளனர். ஆனால் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கிய 3 தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுக்குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: கல்குவாரியில் தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி... கதறும் குடும்பத்தினர்!

அதில், உயிரிழந்தவர்கள் அண்ட்க குவாரியில் வேலை செய்து வந்த அர்ஜித், ஆண்டிச்சாமி, கணேஷ், ஆறுமுகம் மற்றும் முருகானந்தம் ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் குவாரிக்கு முறையான அனுமதி பெறப்பட்டு புதுப்பிக்கப்ப்ட்டு வருகிறதா? அனைத்து வகையான விதிகளும் பின்பற்றப்பட்டதா? அல்லது சட்டவிரோதமாக இயங்கி வந்ததா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே உயிரிழந்த அர்ஜித் என்பவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், மல்லாக்கோட்டை கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான கல் குவாரியில் இன்று (20.5.2025) காலை எதிர்பாராதவிதமாக பாறை மற்றும் மண் சரிந்து விழுந்த விபத்தில் கல் குவாரியில் பணி செய்து கொண்டிருந்த திரு.முருகானந்தம், திரு.ஆறுமுகம், திரு.கணேசன், திரு-ஆண்டிச்சாமி மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேரந்த திரு.ஹர்ஷித் ஆகிய ஐந்து நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் அவர்களை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி மீட்பு நடவடிக்கைளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திரு.மைக்கேல் என்பவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கிணற்றுக்குள் சீறிபாய்ந்த கார்... எடுக்க எடுக்க வரும் சடலங்கள்... சாத்தான்குளத்தில் சோகம்!!