தமிழ்நாட்டில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (ஜூலை 17) முதல் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் தொடங்குகின்றன என்று தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தின் தலைமை கணக்கெடுப்பு அதிகாரி சுந்தரேஷ் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை சிவானந்தா சாலையில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இக்கணக்கெடுப்பின் முக்கிய விபரங்களை வெளியிட்டார். தமிழகத்தில் கடைசியாக 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், தற்போது 16 ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் 2027 இரண்டு கட்டங்களாகத் தொடங்குகின்றன. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் நடைபெறும் இந்த வரலாற்று மைல்கல் கணக்கெடுப்பு, காகிதப் பதிவேடுகளுக்குப் பதிலாக மொபைல் செயலிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் இந்தியாவின் முதலாவது டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பாக அமையவுள்ளது.

நாளை முதல் ஜூலை 31 வரை பொதுமக்கள் தங்களின் விவரங்களை இணையதளத்தில் தாங்களாகவே பதிவு செய்வதற்கான 'சுய கணக்கெடுப்பு' (Self-Enumeration) வசதி செயல்பாட்டில் இருக்கும். இதற்காகப் பொதுமக்கள் [https://se.census.gov.in](https://se.census.gov.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தி, மொபைல் எண் மற்றும் OTP சரிபார்ப்பு மூலம் தங்களின் குடும்ப விவரங்களை 15 முதல் 20 நிமிடங்களில் பதிவு செய்யலாம். இதில் புவிசார் குறியீட்டுடன் வரைபடத்தில் வீட்டின் இருப்பிடத்தைக் குறிக்கும் வசதியும் உள்ளது. சுய கணக்கெடுப்பை முடித்தவுடன் வழங்கப்படும் தனித்துவமான அடையாள எண்ணை (SE ID), பின்னர் இல்லங்களுக்கு வரும் கணக்கெடுப்பாளர்களிடம் காண்பிக்க வேண்டும்.
இதையும் படிங்க: 55 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை! புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை!
இதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை அரசு ஊழியர்கள் மற்றும் கணக்கீட்டாளர்கள் வீடு வீடாகச் சென்று விவரங்களைச் சேகரிக்கும் களப்பணிகளை மேற்கொள்வார்கள். இக்கணக்கெடுப்பின் போது வீட்டின் நிலைமை, குடிநீர், மின்சாரம், இணைய வசதி, வாகனங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள் உள்ளிட்ட சுமார் 33 கேள்விகள் கேட்கப்படும். இரண்டாம் கட்டத்தில், பிப்ரவரி 2027-ல் கல்வியறிவு, இடம்பெயர்வு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டு, 2027 மார்ச் 1 அன்று நாட்டின் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
இப்பணிகளுக்காக மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களும், சென்னையில் சென்னை மாநகராட்சி ஆணையாளரும் முதன்மை கணக்கெடுப்பு அதிகாரிகளாகச் செயல்படுவார்கள். மொத்தம் 1,026 பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, 6 கணக்காளர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் என்ற வீதத்தில் கண்காணிப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்க மூன்றடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே பயன்படுத்தி, இக்கணக்கெடுப்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தலைமை கணக்கெடுப்பு அதிகாரி சுந்தரேஷ் பாபு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: தேசிய தடகளத்தில் தமிழகத்திற்கு பெருமை: 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கௌதமி ஜெயராமன் தங்கம் வென்று சாதனை!