தங்களைத் தவிர்த்து யாரும் தனிப்பெரும்பான்மையுடன் வெல்ல முடியாது என்ற மமதையிலும், 2026 தேர்தலை நோக்கி மேலும் பல கட்சிகளை கூட்டணியில் இணைக்கப்போவதாகவும் கூறிக்கொண்டு இருக்கிறது திமுக. ஆனால் தற்போது இருக்கக்கூடிய கூட்டணியிலேயே முரண்பாடுகள் தலைதூக்கி வருகின்றன. குறிப்பாக, விசிக, காங்கிரஸ் இடையிலான மோதலை திமுக கண்டும் காணாமல் இருப்பது கூட்டணிக்குள் பதற்த்தை அதிகரித்துள்ளது.
ராமதாஸ் - செல்வ பெருந்தகை சந்திப்பு: மரியாதையா? முயற்சியா?
சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி - சென்னை வழியில் பாமக தலைவர் ராமதாஸை சந்தித்த காங்கிரஸ் மாநில தலைவர், இது மரியாதைக்குரிய சந்திப்பு எனக்கூறினார். ஆனால் அதற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில், “பாஜகவை தவிர யாரும் கூட்டணிக்கு வந்தாலும் மறுக்கமாட்டோம்” என அவர் பேசியது, விசிகாவின் கோபத்தைக் கிளப்பியது.

இதையும் படிங்க: எவராலும் 100க்கு 100% வாக்குறுதி நிறைவேற்றவே முடியாது... திமுகவுக்கு வரிந்து கட்டி வந்த திருமா..!
அதற்கு பதிலளிக்கும்படி, “2011-இல் பாமகவும், விசிகவும் ஒரே கூட்டணியில் போட்டியிட்டதே” என்று நினைவுகூர்ந்த செல்வப்பெருந்தகை, இப்போது மட்டும் என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பினார். மேலும், இருவரும் ஒரே கூட்டணியில் இருந்தால்தான் இரு சமூகங்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றும் கருத்து தெரிவித்தார்.
திருமாவின் கடுமையான எதிர்ப்பு:
இது விசிக தலைவர் திருமாவளவை கடுப்பேற்றியுள்ளது. பாமக இருக்கும் கூட்டணியில் விசிக ஒருபோதும் இடம்பெறாது என்ற நிலைப்பாட்டில் திருமா உறுதியாக இருந்து வரும் நிலையில் 2011 தேர்தலை போல தற்போதும் இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்ற செல்வப்பெருந்தகையின் கருத்து விசிகவை ஆழமாக பாதித்திருக்கிறது.

விசிகவிற்கு எதிராக தலித் அல்லாத கூட்டமைப்பை உருவாக்கியவர் ராமதாஸ். அவருடன் எப்படிப் பணியாற்றுவது?” என திருமாவளவன் கண்டனம் தெரிவித்தார். பாமகவுடன் எப்படி கூட்டணி உறவை பகிர்ந்து கொள்ள முடியும் என செல்வப்பெருந்தகைக்கு கேள்வி எழுப்பி சிறுத்தைகள் சீறி வருகின்றனர்.

விசிகவின் துணை பொதுச்செயலாளர் வன்னிய அரசுவும் “தமிழகத்தில் காங்கிரஸுக்கு வாக்கு வங்கி இல்லை; திமுக கூட்டணியில் விசிகதான் இரண்டாவது பெரிய கட்சி” என்றும் பேசியது எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதாக அமைந்தது. விசிகவின் நிலைப்பாட்டை குறைத்து மதிப்பிட்டு செல்வப்பெருந்தகை பேச பதிலுக்கு காங்கிரஸின் வாக்கு வங்கியை குறைத்து மதிப்பிட்டு விசிக பேச இரு தரப்பிற்கும் இடையே வார்த்தை போர் முற்றியது.
திமுக தலைமை மௌனமா? திட்டமா?

திமுக கூட்டணியின் இரண்டு முக்கிய கட்சிகள் வார்த்தை போரில் ஈடுபட்டு வரும் நிலையில், கூட்டணிக்கு தலைமையான திமுக மௌனம் காத்து வந்தது. இந்நிலையில் யார் சொல்லி செல்வப்பெருந்தகை ராமதாசை சந்தித்தார் என காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் போன்றவர்களை கேள்வி எழுப்பி இருந்தார். தற்போது திமுகவின் மௌனம் மூலமாக மாணிக்கம் தாகூர் எழுப்பிய கேள்வி எல்லோருக்கும் எழ தொடங்கியிருக்கிறது.
பாமக - விசிகா இடையிலான பதட்டம்: தலைமை சோதிக்கிறதா?
அதாவது செல்வப்பெருந்தகை ராமதாசை சந்தித்த பின்னணியில் விசிகவை சீண்டி ஆழம் பார்க்கும் அஜெண்டா திமுகவிற்கு இருக்கிறதா என சந்தேகப்பட வைத்திருக்கிறது.

பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வந்தால் விசிகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என திமுக பல்ஸ் பார்க்க வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்.
கம்யூனிஸ்டு கட்சியின் அதிர்ச்சி பதில்:
மூன்று நாட்களுக்கு முன்பாக ஆங்கில நாளிதலுக்கு பேட்டியளித்த மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சண்முகத்திடம் “வரும் தேர்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சியமைக்குமா?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எதிர்பாராத விதமாக பதிலளித்த சண்முகம், “விஜய் எடுக்கும் முடிவு பொறுத்துதான் திமுக வெற்றி முடியும்” என கூறியிருந்தார்.

அதேபோல பல இடங்களில் கூட்டணி இல்லாமல் திமுகவால் வெற்றி பெற முடியாது என்றும் பேசி வருகிறார் சண்முகம். பாஜக எதிர்ப்பு, சனாதனம் எதிர்ப்பு என்ற புள்ளியில் திமுக கூட்டணியில் பயணிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் நெருக்கத்தில் சீட்டு பேரம் வழியாக உரிய மரியாதையை எதிர்பார்ப்பதையே சண்முகத்தின் பேச்சு காட்டுகிறது. விசிகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் இப்படி இருக்க மதிமுகவிலும் குழப்பங்கள்,கும்மி அடிக்கின்றன.
மதிமுக கூட்டத்தில் வெடித்த விமர்சனங்கள்
சமீபத்தில் ஈரோட்டில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழுவில், திமுக மீது கடுமையான விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டன. அது வெளியே வந்ததும், திமுக அதற்கு பதிலடியாக சில முக்கிய மதிமுக நிர்வாகிகளை தன் கட்சியில் இணைத்துக் கொண்டது.

மதிமுக கூட்டணிக்கு வந்ததில் இருந்தே கூட்டணி தர்மத்தை மனதில் வைத்து யார் வந்தாலும் அரவணைக்காமல் அமைதி காத்து வந்தது திமுக, ஆனால் பொதுக்குழு கூட்டத்தில் சில மதிமுக நிர்வாகிகள் வாயை விட்டது கடைசியில் அந்த கட்சிக்கே பேரிடியாக மாற, அவசரமாக அறிவாலயம் சென்ற வைகோ பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனையை சுமூகமாக்கியதாக சொல்கிறார்கள்.
ஆனாலும், மதிமுக நிர்வாகிகள் மட்டத்தில் திமுக மீது இருந்த அதிருப்தி இன்னும் நீடிப்பதாக என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: உண்மையா எந்த உள்நோக்கமும் இல்லங்க.. LGBTQ+ சர்ச்சை.. வருத்தம் தெரிவித்த திருமா..!