கடந்த 2025 பிப்ரவரி 12 அன்று கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற "மாணவர் பாராளுமன்றம்" நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார், மற்றும் இதில் LGBTQ+ சமூகத்தின் உரிமைகள் குறித்த விவாதமும் இடம்பெற்றது.

எல்.ஜி.பி.டி.கியூ சமூகம் குறித்து ஒரு மாணவர் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில், விவாத பொருளாகின. இந்த நிலையில், எந்த ஒரு உள்நோக்கமும் இல்லாமல் தான் கருத்து தெரிவித்ததாகவும் எல் ஜி பி டி கியூ தோழர்களின் மனம் வருந்தும்படியாக இருந்ததற்கு வருந்துவதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தம்பி விஜய்...அதிமுக கொள்கை எதிரியா? இல்லையா? கொஞ்சம் சொல்லிட்டு போப்பா ! திருமா டைரக்ட் அட்டாக்!

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்த "மாணவர் பாராளுமன்றம்" என்னும் நிகழ்வின்போது மாணவர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு விடையளித்தேன். அதில் ஒரு மாணவர் எழுப்பிய வினாவுக்கு நான் அளித்த விடை, பாலினச் சிறுபான்மை பிரிவினரின் மனம் நோகும்படி அமைந்துவிட்டதாக அறிந்து வேதனைப்படுகிறேன். உள்நோக்கம் ஏதுமின்றி நான் கூறிய அக்கருத்து அவர்களின் உள்ளத்தைக் காயப்படுத்தியிருப்பதாக என் கவனத்திற்கு வந்துள்ளது. அதற்காகப் பெரிதும் வருந்துகிறேன் என திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2006 இல் சட்டப் பேரவையில் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில்தான், திருநங்கையருக்கான நலவாரியம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது. ஒரு அரசியல் கட்சியில் திருநங்கையருக்கென அணி ஒன்றை உருவாக்கிய சிறப்பும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கே உண்டு. எப்போதும் LGBTQ + தோழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிற, அவர்களுக்கு இன்னல் நேரும்போதெல்லாம் ஆதரவாய் நிற்கிற கட்சியே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என விளக்கம் அளித்துள்ளார்.

எனவே, எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ+ பாலின வகையினர் உள்ளிட்ட அனைத்து விளிம்புநிலை சமூகத்தினரின் நலன்களுக்காகப் போராடும் இயக்கம்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்பதைக் கருத்தில் கொண்டு, அத்தோழர்கள் இதனைப் பொறுத்துக்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தவெக கொள்கை தலைவராக அம்பேத்கர் இருந்திருக்க மாட்டார்.. ஓபனாக அடித்த திருமாவளவன்!!