தமிழகத்தில் ஆளும் தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்றும், அதன் பிறகு தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தி.மு.க.விற்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவும் என்று த.வெ.க.வினரே சொல்வார்கள் என்றும் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.
குடியாத்தம் நெல்லூர் பேட்டை ஏரிக்கரையில் உள்ள குடியிருப்புகளைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜெகன்மூர்த்தி, த.வெ.க. மற்றும் தி.மு.க.வுக்கு இடையேயான போட்டிகுறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.
த.வெ.க.விற்கும் தி.மு.க.விற்கும் தான் போட்டி என த.வெ.க.வினர் சொல்லி வருவது குறித்துக் கேட்கிறீர்கள். ஜனவரிக்குப் பிறகு அ.தி.மு.க.விற்கும் த.வெ.க.விற்கும் மட்டும்தான் போட்டி என அவர்களே சொல்வார்கள். தி.மு.க. கூட்டணியில் உள்ள பல கட்சிகள் கூட்டணியை விட்டு வெளியே வந்து, கூட்டணி உடையும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இதையும் படிங்க: 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி'! நாளை தொடங்குகிறது திமுகவின் தேர்தல் பரப்புரை!
மேலும், எல்லா கட்சிகளும் தாங்கள்தான் முதல்வர் எனச் சொல்வார்கள் என்றும், அண்டை மாநிலத்திற்கும் நாங்கள் தான் முதல்வர் எனச் சொல்வார்கள் என்றும் கூறிய அவர், "ஆனால், அது தேர்தலுக்குப் பிறகுதான் தெரியவரும்," எனத் தெரிவித்தார். தற்போதைய தி.மு.க. அரசின் செயல்பாடுகள் குறித்து ஜெகன்மூர்த்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
"தி.மு.க. ஆட்சியில் பல்வேறு துறைகளில் உள்ள அரசு ஊழியர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். தேர்தல் அறிக்கையில் சொன்ன ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவோம் என்று சொன்னதை தி.மு.க. நிறைவேற்றவில்லை. மீண்டும் தேர்தல் வரும்போது அதே தேர்தல் வாக்குறுதிதான் அவர்கள் தருவார்கள். ஆனால், அதை நிறைவேற்ற மாட்டார்கள்," என்று அவர் குற்றம் சாட்டினார்.
முன்னதாக, வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர் பேட்டை ஏரிக்கரையில் உள்ள 35 வீடுகள் நீர்நிலை பகுதியில் உள்ளதால் அதை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்துத் தகவல் அறிந்த எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்தி அங்குச் சென்று குடியிருப்புகளைப் பார்வையிட்டார்.
அப்போது, அங்கு இருந்த பொதுமக்கள் அவரிடம், தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும், தங்களுக்குக் கால அவகாசம் வேண்டும் எனவும் கோரிக்கை மனு அளித்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிபதிகளை மிரட்ட திமுக முயற்சிக்கிறது - அண்ணாமலை குற்றச்சாட்டு..!