தமிழக அரசியலில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமியும், தி.மு.க. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் இடையிலான வார்த்தை மோதல். கரூர் தவெக நெரிசல் சம்பவத்தைத் தொட்டு வேலுசாமி எழுப்பிய கேள்விகளுக்கு, உதயநிதி ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் அடிக்கின்றனர். இது தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி திருச்சி வேலுசாமி சமீபத்தில் அளித்த பேட்டியில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு தருவோரே தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும் எனத் தெரிவித்தார். கரூர் நெரிசல் சம்பவத்தில் 41 உயிரிழப்புக்கு ஆட்சியாளர்களின் வக்கிர புத்தியும், கையாளாகாத அதிகாரிகளும் காரணம் என விமர்சித்தார்.
மேலும், துபாய்க்குச் சென்ற உதயநிதி, சம்பவத்துக்குப் பின் கரூருக்கு வந்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் துபாய் சென்றதற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பினார். இந்தப் பேச்சு தி.மு.க. தலைமையில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ரூட்ட மாத்து... 2 நாளுக்கு இத செய்யவே கூடாது! கனரக வாகனங்களுக்கு பறந்த உத்தரவு...!
வேலுசாமியின் இந்த வார்த்தைகளுக்கு அதிருப்தி அடைந்த உதயநிதி ஆதரவாளர்கள், சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'வேலுசாமி மன்னிப்பு கேட்க வேண்டும். சுப்பிரமணியசாமியோடு சேர்ந்து ராஜீவ் கொலையில் கூட்டு சதி செய்த துரோகியே, சத்தியமூர்த்தி பவனில் யாரும் உன்னை மதிக்க மாட்டார்கள்.
அயராது உழைக்கும் உதயநிதியை விமர்சிக்கும் அளவுக்கு உனக்கு என்ன யோக்கியம்? இந்தியா கூட்டணியை சிதைக்கும் இவர் மீது ராகுல் காந்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாவை அடக்கி பேசு, இல்லையேல் அடக்கப்படுவாய்' என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் அடிக்கப்பட்டன.

இந்த போஸ்டர்கள் நாமக்கல் மேற்கு மாவட்டம், பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் ஒட்டப்பட்டுள்ளன. அதேபோல், கோவை மாவட்டத்திலும் இதேபோன்ற கண்டன போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களிலும் #VelusamyApologize, #UdhaySupport போன்ற ஹேஷ்டேக்குகளுடன் பதிவுகள் பரவியுள்ளன.
இதற்கு பதிலாக, வேலுசாமி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கடுமையான பதிலடி கொடுத்துள்ளனர். வேலுசாமியை ராஜீவ் கொலை சதியுடன் இணைத்துப் போஸ்டர் அடிப்பது அரசியல் அறியாமை மட்டுமல்ல, காங்கிரஸ் வரலாற்றை அவமதிப்பதாகக் கூறுகின்றனர்.
'தி.மு.க.வினர் காங்கிரஸின் நம்பிக்கையை சிதைக்க முடியாது. 2026-ல் தி.மு.க.வின் கனவைத் தகர்க்கப்போகும் சக்தி காங்கிரஸ்தான். 'கை நம்மை விட்டுப் போகாது' என உதயநிதி சொல்கிறார். ஆனால், தி.மு.க. காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் தனித்துச் சாதிக்க முடியாது என வரலாறு கூறுகிறது. ராகுலும் ஸ்டாலினும் நண்பர்கள் தான், ஆனால் காங்கிரஸ் அடிமை அல்ல. அதிகாரப் பங்கீடு நியாயமாக வழங்க வேண்டும்' என வாதிட்டுள்ளனர்.
காங்கிரஸ் தொண்டர்கள் ஒன்றிணைவோம். காங்கிரஸின் குரலை தி.மு.க.வின் இரட்டை நடிப்பு மூட முடியாது. 2026ம் ஆண்டு காங்கிரஸின் எழுச்சி ஆண்டு எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் #CongressRising, #DMKDoubleGame போன்ற ஹேஷ்டேக்குகள் பிரபலமடைந்துள்ளன.
இரு தரப்பினருக்கும் இடையிலான இந்த மோதல், தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் புதிய சலசலப்பை உருவாக்கியுள்ளது. கரூர் நெரிசல் சம்பவம் ஏற்பட்டு ஒரு மாதம் கழித்தும், அதைத் தொட்டு அரசியல் விமர்சனங்கள் தொடர்கின்றன. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. 2026 தேர்தலில் கூட்டணி இடங்களைப் பற்றிய பேச்சுவார்த்தைகள் இப்போது சவாலாக மாறியுள்ளன. அரசியல் பார்வையாளர்கள், இந்த மோதல் கூட்டணியை பலவீனப்படுத்தலாம் என எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: 17 நாட்கள்!! வெளியே தலைகாட்டிய புஸ்ஸி ஆனந்த்! விஜயை சந்தித்த பின் நிர்வாகிகளிடன் மீட்டிங்!