தனியார் பள்ளிகளுக்கு அனுமதி மற்றும் அங்கீகாரம் வழங்குவதில் நூறு கோடி ரூபாய் அளவிலான முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்தது. இன்று காலை நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்த இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கு தனியார் பள்ளி நிர்வாகங்களிடமிருந்து வந்த புகார்களை அடிப்படையாகக் கொண்டது. முந்தைய திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், மேம்படுத்தல், டிடிசிபி அனுமதி, சிஎம்டிஏ அனுமதி போன்ற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து பெரும் தொகை வசூலிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்ற பதிவுசெய்யப்படாத அமைப்பின் தலைவர் பி.டி. அரசகுமார் மற்றும் பிறர் இந்தப் பணத்தை உறுப்பினர் கட்டணம் மற்றும் சந்தா என்ற பெயரில் வசூலித்ததாகவும், பின்னர் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் புகார்கள் கூறுகின்றன. இதுவரை நூற்று எழுபத்தேழு பள்ளி நிர்வாகங்கள் புகார் அளித்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வசூலிக்கப்பட்ட தொகை நூறு கோடியைத் தாண்டியதாகவும், சில மதிப்பீடுகளின்படி நானூறு கோடி வரை இருக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் அரசகுமார் மற்றும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் விசாரணையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பெயரும் சேர்க்கப்பட்டு, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம் அவரது சென்னை மற்றும் திருச்சி வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆவணங்கள், மொபைல் போன்கள், லேப்டாப்கள் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார் மற்றும் ஒத்துழைப்பு அளித்து வருவதாகத் தரப்பு தெரிவித்தது. வருமான வரி அறிக்கைகளையும் சமர்ப்பித்ததாகக் கூறப்பட்டது.அன்பில் மகேஷ் தரப்பில், தனக்கு எதிராக நேரடி ஆதாரங்கள் இல்லை என்றும், தனது பெயரைப் பயன்படுத்தி மற்றவர்கள் பணம் வசூலித்திருக்கலாம் என்றும் வாதிடப்பட்டது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதால் கைது தேவையில்லை எனவும் முன்ஜாமீன் கோரப்பட்டது.
இதையும் படிங்க: சீரழியும் சமூகம்..! கோவையில் போதை மாத்திரை விற்பனை..! 5 இளைஞர்களை தட்டி தூக்கிய போலீஸ்..!!
ஆனால் காவல்துறை தரப்பில், இது நிதி தொடர்பான பெரும் குற்றச்சாட்டு என்றும், காவலில் வைத்து விசாரிப்பது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டது. விசாரணை ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாகவும், முன்ஜாமீன் அளித்தால் விசாரணை பாதிக்கப்படும் என்றும் வாதிடப்பட்டது.நீதிபதி இந்த வாதங்களைக் கேட்டபின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார். காலையில் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடியாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
இதையும் படிங்க: “கார்த்திகா வந்தாச்சு"..! 9 பேருக்கு ஜாமீன்..! சிறை வாசலில் நாம் தமிழர் தொண்டர்கள் உற்சாகம்..!