கோவை மாநகரப் பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் நோக்கில் போலீசார் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கம் பரவாமல் தடுக்கும் முயற்சியாக அடிக்கடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பின்னணியில் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் அர்ஜூன்குமார் தலைமையிலான குழுவினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் கோவை விமான நிலையத்தின் பின்புறம் அமைந்துள்ள எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனியில் உள்ள கருப்பராயன் கோவில் அருகே சென்றபோது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக ஐந்து பேர் நின்றுகொண்டிருந்தனர்.
உடனடியாக போலீசார் அவர்களை அணுகி விசாரணை நடத்தினர்.விசாரணையில் அந்த ஐந்து பேரும் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. அவர்களில் மதுரையைச் சேர்ந்த மாதவன் (வயது 23), கோவை சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த ரபீகர் (22), ஜெயராஜ் என்கிற தொட்டி ஜெயா (28), ஆகாஷ் (19) மற்றும் தமிழரசன் (20) ஆகியோர் அடங்குவர். போலீசார் இவர்களை உடனடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2,980 போதை மாத்திரைகள், இரண்டரை கிலோ கஞ்சா, ஊசிகள் மற்றும் ஆறு செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகளின் மதிப்பு மட்டும் ரூ.7.5 லட்சத்துக்கும் மேல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருட்கள் யாருக்கு விற்பனை செய்ய கடத்தப்பட்டன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.போலீசார் விசாரணையில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன. கைதான ஐந்து பேரும் பெங்களூரில் இருந்து போதை மாத்திரைகளை ஒரு மாத்திரைக்கு ரூ.30 என்ற விலையில் வாங்கி, அவற்றை கோவைக்கு கடத்தி வந்திருக்கின்றனர். அங்கு வாங்கிய மாத்திரைகளை கோவையில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர். ஒரு மாத்திரையை மட்டும் ரூ.250-க்கும் அதிகமாக விற்பனை செய்து வந்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING போதைப்பொருள் வழக்கில் அதிரடி திருப்பம்... தவெக நிர்வாகி பூபாலனிடம் விடிய விடிய விசாரணை... களத்தில் இறங்கிய தேசியப்படை...!
இதன் மூலம் பெரும் லாபம் ஈட்ட முயன்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர். சிலருக்கு ஐந்து மாத்திரைகளை நன்றாக அரைத்து, அதில் தண்ணீர் கலந்து ஊசி மூலம் உடலில் ஏற்றியும் வழங்கியிருக்கின்றனர். இத்தகைய போதை ஊசிக்கு ஒரு முறைக்கு ரூ.1,500 முதல் ரூ.1,800 வரை வசூல் செய்துள்ளனர். இது இளைஞர்களின் உடல்நலத்திற்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கக்கூடிய செயலாகும்.கோவை மாநகரப் பகுதியில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருவதைக் கண்டறிந்த போலீசார், இதுபோன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். விமான நிலையம் அருகேயும், மாணவர்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பள்ளிகளில் சமூகநீதி மாணவர் படை அமைக்க வேண்டும்: விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆவேசம்!