மதுரை ஆதீனத்தின் தற்போதைய 293-வது பீடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் 2021 ஆகஸ்டு 23 முதல் பொறுப்பு வகிக்கிறார். மதுரை ஆதீனம் பல்வேறு சமய மற்றும் சமூக விவகாரங்களில் தனது கருத்துகளைத் தெரிவித்து வருவதோடு, சில சமயங்களில் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளிலும் தலையிட்டு வருகிறார். இவரது பேச்சுகள் சில சமயங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, மத மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக தற்போது இந்த விவகாரம் எழுந்துள்ளது.
சென்னை காட்டாங்கொளத்தூரில் தருமபுரம் ஆதீனம் ஏற்பாடு செய்த சைவ சித்தாந்த மாநாட்டில் மதுரை ஆதீனம் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின்போது, அவரது பேச்சு மத மோதலைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், மதுரை ஆதீனத்துக்கு எதிராக நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க, மதுரை ஆதீனம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஜூலை 17 அன்று, நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது.
இதையும் படிங்க: சேஃப்டி ஃபர்ஸ்ட்! கூடுதல் தோழி விடுதிகள்.. டெண்டர் கோரிய தமிழக அரசு..!

மதுரை ஆதீனத்துக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி, தமிழக காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மதுரை ஆதீனத்தின் முன்ஜாமினை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளதற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். குடல் இறக்கம் அறுவைச் சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் மதுரை ஆதீனம் அவர்களை, இரண்டு நாட்களுக்கு முன்பு சென்று, விசாரணை என்ற பெயரில் சுமார் ஒரு மணி நேரம் துன்புறுத்தி விட்டு, தற்போது விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று திமுக அரசின் காவல்துறை கூறுவது, உள்நோக்கம் கொண்டது என தெரிவித்தார்.
தமிழக முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்க, உப்பு சப்பில்லாத காரணங்களை கூறி மதச்சார்பின்மை என்ற பெயரில் யாரையோ திருப்திப்படுத்த திமுக அரசு நாடகமாடி கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். மதுரை ஆதீனத்தை தொடர்ந்து துன்புறுத்தும் போக்கை, திமுக அரசின் காவல்துறை கைவிட வேண்டும் என்றும் உடனடியாக, அவரது முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனுவைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: வாய்ப்பே இல்ல கெளம்புங்க... தேசிய கல்விக் கொள்கையை எப்போதும் எதிர்ப்போம்... அன்பில் மகேஷ் உறுதி!