பெண்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவை தமிழ்நாடு அரசின் முக்கிய முன்னுரிமைகளாக உள்ளன. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவு ஆகியவற்றில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வரும் நிலையில், பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்று, பாதுகாப்பான மற்றும் மலிவு விலையில் தங்குமிடம் கிடைப்பது ஆகும்.
குறிப்பாக, வெளியூர்களில் இருந்து வேலைக்காக நகரங்களுக்கு வரும் பெண்களுக்கு, பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய விடுதிகளின் தேவை அதிகரித்து வருகிறது.இந்தத் தேவையை உணர்ந்து, தமிழ்நாடு அரசு தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தின் கீழ் ‘தோழி விடுதிகள்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தலைமையில், பெண்களின் பாதுகாப்பு, மரியாதை மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்துவதற்கு ஒரு முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது.

வேலைக்காக வெளியூர்களுக்கு வரும் பெண்களுக்கு 24/7 பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய தங்குமிடத்தை வழங்குவது, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் மலிவு விலையில் தங்குமிட வசதிகளை உறுதி செய்வது, நவீன வசதிகளுடன் கூடிய விடுதிகளை உருவாக்கி, பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதன் மூலம், அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவு முயற்சிகளை ஊக்குவிப்பது உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு தோழி விடுதிகள் தொடங்கப்பட்டன.
இதையும் படிங்க: வாய்ப்பே இல்ல கெளம்புங்க... தேசிய கல்விக் கொள்கையை எப்போதும் எதிர்ப்போம்... அன்பில் மகேஷ் உறுதி!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 2024 ஜனவரி 4 அன்று, தாம்பரத்தில் 18 கோடி ரூபாய் செலவில் 461 படுக்கைகள் கொண்ட தோழி விடுதியை திறந்து வைத்தார். காஞ்சிபுரம், ஈரோடு, தர்மபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 700 படுக்கைகளுடன் கூடிய புதிய தோழி விடுதிகள் அமைய உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் உதகை, திருப்பத்தூர், திருவாரூர், வீர சோழபுரம் உள்ளிட்ட 4 பகுதிகளில் தோழி விடுதிகளைக் கட்டுவதற்கான டெண்டரை தமிழக அரசு கோரி உள்ளது.
இதையும் படிங்க: DMK 2.0 ஆட்சி தரமா இருக்கும்..! விரைவில் தமிழகம் முதலிடம்.. முதல்வர் ஸ்டாலின் உறுதி..!