கோவை மாவட்டம் ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது மாணவர் அமுதன், ஆகஸ்ட் 10, 2026 அன்று சக மாணவர்கள் உள்ளிட்ட கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உயிரிழப்புக்கு நீதி கோரி, திமுக மாணவர் அணி சார்பில் இன்று கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அமுதன் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தபோது, ஜூலை 21 அன்று விடுதி சமையலரைத் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு, ஜூலை 24 அன்று விடுதியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர் அவர் நண்பர்களுடன் ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். ஆகஸ்ட் 10 அதிகாலையில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று மற்றொரு மாணவர் இளவரசன் தங்கியிருந்த வீட்டில் புகுந்து தாக்கியும் மொபைல் போனைப் பறித்தும் சென்றதாக புகார் எழுந்தது. இதில் அமுதன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், அதே நாள் காலை சுமார் 8.30 மணியளவில் அமுதனும் அவரது நண்பர் ஸ்ரீமனும் மாளுமிச்சம்பட்டி அருகே வழிமறிக்கப்பட்டு, கல்லூரி பின்புற மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கம்புகள் மற்றும் இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டனர்.

அமுதன் சுமார் 10 மணிக்கு தனது அறைக்குத் திரும்பியாலும், பிற்பகலில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மருத்துவ அறிக்கையின்படி தலையில் ஏற்பட்ட காயத்தால் ரத்தக்கசிவு ஏற்பட்டதே மரணத்திற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.செட்டிப்பாளையம் காவல்நிலையம் போலீசார் ஸ்ரீமன் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்குப் பதிவு செய்து, பல மாணவர்களைக் கைது செய்தனர். ஆகஸ்ட் 13 வரை கைதானவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்தது. போலீஸ் தரப்பில் இது கோஷ்டி மோதல் மற்றும் மொபைல் போன் பறிப்பு தொடர்பான பழிவாங்கல் தாக்குதல் எனக் கூறப்பட்டது. ஆனால் அமுதனின் பெற்றோர் மற்றும் சில அரசியல் தலைவர்கள், கல்லூரியில் போதைப்பொருள் புழக்கம் குறித்து அமுதன் காவல்துறையிடம் தகவல் தெரிவித்ததால் அவர் கொல்லப்பட்டதாகக் குற்றம்சாட்டினர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் இந்த விவகாரத்தை எழுப்பி, அரசு பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தினார். தவெக அரசின் கவனக்குறைவால் போதைப்பொருள் புழக்கம் குறித்து புகாரளித்த மாணவர் அமுதன் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டதாகவும், கல்லூரி நிர்வாகமும் காவல்துறையும் இதை மூடிமறைக்க முயல்கின்றன என்றும் குற்றம்சாட்டினார். இதைக் கண்டித்து கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில், இன்று காலை இந்துஸ்தான் கல்லூரி எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. உயிரிழந்த மாணவனுக்கு நீதி கேட்டு முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: பாஜகவுடன் திமுக நேரடி கூட்டணி..! கூச்சமே இல்லாம காலில் விழுவாங்க..! அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்.!!
இதையும் படிங்க: "ரம்மி விளையாட்டில் 13 ஜோக்கர்கள்"..! அலங்கோலமான சட்டமன்றம்..!! ஐ. லியோனி விமர்சனம்.!!