தமிழக சட்டசபை தேர்தலில் எதிர்பாராத தோல்வியை சந்தித்துள்ள திமுகவில், தற்போது எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. குறிப்பாக, வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை உடைக்க முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க திமுக தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பல கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் திமுக பின்னடைவை சந்தித்தது. மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தது கட்சிக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தபோதிலும், திமுக 59 இடங்களில் வெற்றி பெற்று சட்டசபையில் முக்கிய எதிர்க்கட்சியாக திகழ்கிறது.
ஸ்டாலின் தோல்வியடைந்த நிலையில், அவரது மகனும் இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக வரலாம் என்ற தகவல்கள் கடந்த சில நாட்களாக பரவி வந்தன. ஆனால் இதே நேரத்தில், திமுக மீது நீண்ட காலமாக இருந்து வரும் வாரிசு அரசியல் குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக முன்வைத்தன.
இதையும் படிங்க: 180 சீட்டு ஜெயிச்சிருக்கணும்! தோத்ததே இவரால தான்! செல்வப்பெருந்தகைக்கு எதிராக போர்க்கொடி!

அரசியல் விமர்சகர்கள் கூறுவதாவது, “வாரிசு அரசியல் குறித்த எதிர்மறை எண்ணம் பொதுமக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதனால் தான் இந்த தேர்தலில் திமுகவின் பல முக்கிய தலைவர்களும் அமைச்சர்களும் தோல்வியை சந்தித்தனர்” என்கிறார்கள்.
இந்த சூழலில், கட்சியின் மூத்த மற்றும் அனுபவமிக்க தலைவரான கே.என்.நேருவை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்வது குறித்து திமுக உயர்மட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. திருச்சி மாவட்ட அரசியலில் வலுவான செல்வாக்கு கொண்ட நேரு, கட்சிக்குள் மூத்த தலைவராக கருதப்படுவதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் கடைசி நேரத்தில் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் திமுகவின் அடுத்தகட்ட முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்தும் திமுக! கனிமொழி அப்செட்! எதிர்க்கட்சி தலைவர் யார்?!!