கர்நாடக வனத்துறையினரால் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் குறித்து சட்டப்பேரவை விதி 55-ன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இந்த தீர்மானத்தின் மீது திமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனூர் தாலுகாவில் உள்ள மரியம்மன்குடி வனப்பகுதியில் கால்நடைகளைத் தேடிச் சென்ற மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக இங்கு பேசுகிறோம்.
எங்கே தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும், எங்கே தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டாலும், அதற்கு முதலில் குரல் கொடுத்தவர் கழகத் தலைவர் என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
இதையும் படிங்க: 200 கொலைகள், 400 பாலியல் குற்றங்கள்..! "வெட்கமா இல்லையா விஜய்"..? விளாசிய அப்பாவு..!!
வனத்துறையினரால் எந்தவிதமான காரணமும் இல்லாமல் அப்பாவி விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது மனித உரிமை மீறலாகும். இதை ஒரு போலி என்கவுன்ட்டர் என்றும் கூறலாம். போலி என்கவுன்ட்டர் என்றால், சுட்டுக்கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
இதுபோன்ற சம்பவங்களில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்பதை ஆராய வேண்டும். ஒருவர் உயிரிழந்தவுடன், அந்தச் சம்பவம் குறித்து வனத்துறையினர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்குத் தகவல் தெரிவித்திருக்க வேண்டும். கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
மேலும், அவர்கள் ஏதேனும் தவறு செய்தவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உளவுத்துறை மூலம் தகவல்கள் அல்லது அறிக்கைகள் பெறப்பட்ட பின்னர்தான் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வேண்டும். எனவே, சம்பந்தப்பட்டவர்களைப் பாதுகாக்க முயற்சிப்பவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்பட வேண்டும்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட அந்தோணிசாமி, ஜான் பீட்டர், குமார் ஆகிய மூன்று தமிழர்களின் நிலைமையை முதலில் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
மேட்டூர் அணை கட்டப்பட்டபோது தர்மபுரி பகுதியில் வாழ்ந்த இவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து, புலம்பெயர்ந்து அந்தப் பகுதியில் சென்று வசித்து வந்தவர்கள். தங்களுடைய கால்நடைகளான மாடுகள் காணாமல் போனதால் அவற்றைத் தேடி வனப்பகுதிக்குச் சென்றபோதுதான் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்காக கர்நாடக வனத்துறையினர் மான்வேட்டைக்காக வந்ததாக ஒரு காரணம் கூறி, இந்தச் சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கின்றனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஹனூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற உறுப்பினரே இதில் ஏதோ தவறு இருப்பதாக ஒப்புக்கொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளார். கர்நாடக அமைச்சரும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளார்.
ஆனால், இதுதொடர்பாக நேற்று கர்நாடக சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தாக்கல் செய்த அறிக்கையில், இந்தச் சம்பவம் தற்காப்புக்காக நடைபெற்றதாகவும், இதில் எந்தவிதமான உரிமை மீறலும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு தமிழர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாண்புமிகு தமிழக முதலமைச்சரும் இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை தேவை. சிபிஐ விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே, அங்கு தமிழர்களுக்கு எதிராக இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க முடியும்.
மேலும், தற்போது வழங்கப்பட்டுள்ள ரூ.15 லட்சம் நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை. ஒரு கோடி ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும்.
குறிப்பாக, கர்நாடக சட்டப்பேரவையில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களில் ஒரு ஜோடி செருப்பும், அதில் விலைப்பட்டியலும் ஒட்டப்பட்டு, புதிதாக ஆதாரமாக சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அவர்கள் புதிதாக செருப்பு வாங்கி அணிந்துகொண்டு மான் வேட்டைக்குச் செல்லவில்லை என்பதும், தங்களுடைய மாடுகளைத் தேடித்தான் சென்றுள்ளனர் என்பதும் தெரியவருகிறது.
மாடுகளைத் தேடிச் சென்றவர்களை சுட்டுக்கொல்லப்பட்டதை எந்தக் காரணத்தைக் கொண்டும் நியாயப்படுத்துவதை இந்த அவை அனுமதிக்கக் கூடாது என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழர்களுக்கு நியாயம் மட்டுமல்லாமல், உரிய நிவாரணமும் உரிமையும் கிடைப்பதற்காக சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு இந்த மன்றத்தின் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தல்:
சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது மனித உயிருக்கு இன்றைக்கு எந்த மதிப்பும் இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டதைக் காட்டுகிறது. தமிழர்கள் என்றாலே அவர்களை இழிவாக நடத்தும் ஒரு சூழ்நிலை உருவாகிவிட்டது என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.
இந்தச் சம்பவத்தை நமது மாண்புமிகு முதலமைச்சர் மிகவும் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
கர்நாடக அரசு தற்போது வழங்கியுள்ள இழப்பீடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணமாகக் கருத முடியாது. எனவே, கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், இந்தச் சம்பவம் தொடர்பாக முறையான சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு.
அதேபோல், தற்போது மகிமைதாஸ் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்குத் தேவையான முழுமையான மருத்துவச் செலவையும் கர்நாடக அரசு ஏற்க வேண்டும் என்பதும் தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாகும்.
மேலும், உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கும் கர்நாடக அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
எனவே, இந்தச் சம்பவம் தொடர்பாக ஆணித்தரமான முறையில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை இங்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
இதையும் படிங்க: 100 நாள் ஆட்சியில் அமைச்சர்களை ஓடவிட்டதே சாதனை..!! தவெக அரசை விமர்சித்த பரந்தாமன்!!