முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களை நிறைவு செய்த நிலையில், திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பரந்தாமன் கடுமையாக விமர்சித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “இந்த 100 நாள் ஆட்சியின் உண்மையான சாதனை திருவொற்றியூரில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனாவையும் ராஜ்மோகனையும் மக்கள் ஓடவிட்டதுதான்” என்று குறிப்பிட்டார்.
திமுக வெளியிட்ட காணொளியைத் தொடர்ந்து பேசிய பரந்தாமன், விஜய் தலைமையிலான ‘சர்க்கஸ் சர்க்கார்’ ஆட்சியில் 100 நாட்களில் 546 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு முதலமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என்றும், கொலைப் பழியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
போதைப்பொருள் குறித்து தகவல் தந்த மாணவர்களுக்கே பாதுகாப்பு அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், இளைஞர்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்ததாகக் கூறும் தவெக, ஒரு மாணவரின் தகவலையும் ரகசியமாக வைக்கத் தவறிவிட்டதாகச் சாடினார். பெண்கள் பாதுகாப்பு விவகாரத்திலும் தவெகவில் உள்ள பெண்களுக்கே உத்தரவாதம் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளதாகவும், அது ‘சிரிக்கும்’ நிலையில் இருப்பதாகவும் பரந்தாமன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் கால் பதிக்கிறதா? பெங்களூரில் தவெக வியூகம் ஆரம்பமா? கன்னட நாளிதழ்களில் விஜய் கட்சியின் விளம்பரம்!!

முதலமைச்சர் விஜய் இளைஞர்களுக்குத் தவறான முன்னுதாரணமாக விளங்குவதாகவும், சினிமாவில் நடிப்பதுபோல ஆட்சியை நடத்துவதாகவும் அவர் விமர்சித்தார். எதிர்க்கட்சியினரைக் கைது செய்வதில் ஆர்வம் காட்டும் அரசு, குற்றவாளிகளைப் பிடிக்கத் தவறுவதாகக் குற்றம்சாட்டினார். மத்திய அரசிடம் பயந்து செயல்படும் முதலமைச்சர், சட்டப்பேரவையில் மட்டும் ‘பாயும்’ தன்மை கொண்டவராக இருக்கிறார் என்றும், சட்டம் ஒழுங்கு தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்குப் பதில் அளிக்காமல் தவிர்ப்பதாகவும் அவர் கூறினார்.
மின்கட்டணம் திடீரென உயர்ந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகவும், அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து எதிர்க்கட்சி மீதே நம்பிக்கை வைத்துள்ளதாகவும் பரந்தாமன் தெரிவித்தார். நிதி அமைச்சர் 100 நாட்களில் ரூ.15,000 கோடி முதலீடு வந்துள்ளதாகக் கூறுவது பொய் என்றும், தவெக அமைச்சர்களுக்கு அடிப்படை நிர்வாகப் புரிதலே இல்லை என்றும் அவர் காட்டமாக விமர்சித்தார்.
தவெக அரசு மே 10ஆம் தேதி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு சட்டம் ஒழுங்கு சம்பவங்கள், மின்சாரப் பிரச்சினைகள் உள்ளிட்டவை தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சியான திமுகவின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தவிர்க்க முடியாத சக்தி.. தமிழக அரசியல் களத்தில் விசிக-தவெக இணைந்தே பயணிக்கும் - திருமாவளவன்!!