சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். தற்போது போராடு ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என அரசு எச்சரித்துள்ளது. இதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சம ஊதியம் வழங்க மனமில்லாமல் தெருவில் இறங்கிப் போராட விட்டு இருக்கு ஊதியத்தையும் திமுக அரசு பறிப்பதாக குற்றம் சாட்டினார்.
தேர்தல் வாக்குறுதி 311 ல் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதாக திமுக அரசு தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் நான்கரை ஆண்டுகளாக அதனை வழங்காமல் ஏமாற்றிவிட்டு இடைநிலை ஆசிரியர்களை போராடும் நிலைக்கு திமுக அரசு தள்ளி உள்ளதாக தெரிவித்துள்ளார். போராடும் ஆசிரியர்களை குண்டு கட்டாக கைது செய்வதோடு தற்போது போராடும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என திமுக அரசு அறிவித்துள்ளது கண்டனத்திற்கு உரியது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

ஏற்கனவே பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று கொடுத்த வாக்குறுதி எண் 181-ஐ வீசி எறிந்ததோடு, தற்போது இருக்கும் ஊதியத்தையும் பிடித்தம் செய்து, ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பது அராஜகமானது என்றும் கூறினார். பல கோடி செலவழித்து கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று நாடக விழா நடத்தத் தெரிந்த திமுக அரசுக்கு, சம ஊதியம் வழங்கப் பணமில்லையா என்றும் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலம் என்று முழங்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு அரசுப்பள்ளி மாணவர்களின் நலன் கருதியும், இடைநிலை ஆசிரியர்களின் குடும்பங்களின் நலன் கருதியும், கொடுத்த வாக்குறுதிப்படி சம ஊதியம் வழங்க மனமில்லையா எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: பரிதவிக்கும் செவிலியர் பயிற்சி முடித்த அங்கன்வாடி ஊழியர்கள்... பச்சை துரோகம் செய்யாதீங்க... குரல் கொடுத்த சீமான்...!
போராடும் ஆசிரியர்களை முடக்கும் சர்வாதிகாரப் போக்கைக் கைவிட்டு, உடனடியாக ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுத்து, சம ஊதியம் வழங்கி, மாணவர்கள் நலன் காக்க முனைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். திமுக அரசு இந்த அராஜக போக்கை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: திருவண்ணாமலையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலமா? உண்மையை அம்பலப்படுத்திய TN FACT CHECK..!