தமிழ்நாடு முழுவதுமுள்ள காலிப்பணியிடங்களில் செவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்யவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார். கிராம சுகாதார செவிலியருக்கான சிறப்புப் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்களை கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்ய திமுக அரசு மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அங்கன்வாடி பணிகளோடு கிராமப்புறங்களில் உள்ள கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அப்பணிகளில் கிராமப்புற செவிலியர்களுடன் அங்கன்வாடி ஊழியர்கள் ஒருங்கிணைந்து செயல்படும் காரணத்தினால், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அங்கன்வாடி ஊழியர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு 2 ஆண்டுகள் கிராம சுகாதாரச் செவிலியருக்கான சிறப்புப் பயிற்சியையும் தமிழ்நாடு அரசு அளித்து வந்தது என்றும் கூறினார்.

கடந்த 2021ஆம் ஆண்டு திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு, செவிலியர் பயிற்சி முடித்த அங்கன்வாடி ஊழியர்களைக் கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்வதை நிறுத்தி வைத்ததோடு, இனி தமிழ்நாடு மருத்துவப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மட்டுமே கிராம சுகாதாரச் செவிலியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்தது. இதனால், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கிராம சுகாதார செவிலியராகப் பயிற்சி பெற்ற அங்கன்வாடி பணியாளர்களின் எதிர்காலம் இருண்டுபோனது என சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: 2026 தேர்தல் பொங்கல்… கடந்த முறை ரூ. 3000 ஏன் கொடுக்கல? ஊழல் குற்றச்சாட்டு நல்ல வேடிக்கை… விளாசிய சீமான்..!
அதுமட்டுமின்றி, அவர்கள் தங்கள் அங்கன்வாடி பணியையும், வருமானத்தையும் விடுத்து 2 ஆண்டுகள் சுகாதாரப் பயிற்சிபெறச் சென்றதால் அங்கன்வாடி பணியில் கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட எவ்வித சலுகைகளும் கிடைக்கப்பெறாமல் தடைபட்டுப்போனது என்றும் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு, சிறப்புப் பயிற்சி பெற்ற 1200 அங்கன்வாடி ஊழியர்கள் அனைவரையும், எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக கிராம சுகாதார செவிலியராகப் பணிநியமனம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்றும் சென்னையில் தங்களின் வாழ்வாதார உரிமைக்காக போராடி வரும் அங்கன்வாடி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் வெல்லும் வரை நாம் தமிழர் கட்சி தோள் கொடுத்து துணை நிற்கும் என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.
இதையும் படிங்க: தந்தை பெரியார் குறித்து அவதூறு... ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்...!