அரசுப் பதவியைப் பெறுவதற்காக ரூ.5 கோடி லஞ்சம் தர முன்வந்த விவகாரத்தை அரசு விழாவில் பகிரங்கமாகப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, திமுக சார்பில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரிடம் இன்று அதிகாரப்பூர்வமாகப் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த எழும்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் அரசு விழாவில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தனக்கும் முதலமைச்சருக்கும் இடையேயான அரசியல் அனுபவங்களைப் பகிர்வதாகக் கூறி ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டிருந்தார். அதில், "இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியை எனக்குப் பெற்றுத் தர முதலமைச்சரிடம் பரிந்துரை செய்யுங்கள்; அதற்காக ரூ.5 கோடி தருகிறேன் என்று கூறி ஒரு நபரைத் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திரு. லயோலா மணி என்னிடம் அழைத்து வந்தார்" என்று பொது மேடையிலேயே அவர் வெளிப்படையாகப் பேசியிருந்தார்.

அமைச்சரின் இந்தப் பேச்சு அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பிய நிலையில், அரசுப் பதவிக்கு லஞ்சம் தர முயன்ற விவகாரத்தை மறைத்ததும், அதுகுறித்து முறையான சட்ட நடவடிக்கை எடுக்காததும் சட்டப்படி குற்றமாகும் என்பதைச் சுட்டிக்காட்டி திமுக சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: ரூ.634 கோடி லஞ்சப் புகார்! கே.என்.நேரு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்! செக் வைத்தது சுப்ரீம் கோர்ட்!
இதன் தொடர்ச்சியாக, திமுகவின் சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் இ. பரந்தாமன் அவர்கள், இன்று (02.11.2026) சென்னை லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) இயக்குநரை நேரில் சந்தித்துப் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அம்மனுவில், "அரசு விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களே நேரடியாக ஒப்புதல் வாக்குமூலம் போலப் பேசிய காணொலி ஆதாரங்கள் பொதுவெளியில் உள்ளன. எனவே, அரசுப் பதவிக்காக ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற மர்ம நபர், அதற்கு இடைத்தரகராகச் செயல்பட்ட தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி மற்றும் இதனை உரிய சட்ட அமைப்புகளுக்குத் தெரிவிக்காமல் தவிர்த்த அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.400 கோடி லஞ்சப் புகார்! அன்பில் மகேஷுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!