மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமான கல்வெட்டில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரை நீக்கம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடல் நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமான பணிகள் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திமுக ஆட்சியில் ரூபாய் 1520.82 கோடி மதிப்பில் ஜப்பான் உள்ளிட்ட வெளி நாடுகளின் பங்களிப்போடு துவங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது தேர்தல் முடிந்து தமிழக வெற்றி கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று விஜய் தமிழக முதல்வராக உள்ளார் இந்நிலையில் இன்றைய தினம் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது.
இதையும் படிங்க: "குடும்பத்துடன் லண்டன் சென்ற ஸ்டாலின்"..! சென்னை ஏர்போர்ட்டில் திரண்ட திமுகவினர்..!
இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பணிக்கான கல்வெட்டில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. தற்போது கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்த பெயர்களை அகற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து முன்னாள் எம்எல்ஏவும் திருப்போரூர் ஒன்றிய குழு பெருந் தலைவருமான எஸ்.ஆர்.எல் இதயவர்மன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.
அப்போது முன்னாள் முதல்வரின் பெயர் அழிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக கல்வெட்டில் முன்னாள் முதல்வரின் பெயர் பொறிக்கப்பட வேண்டும் இல்லையேல் திமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நாங்கள் முன்னெடுப்போம் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனிடையே தவெக அரசின் இந்த செயலை திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து திமுக தனது அதிகாரப்பூர்வ சோசியல் மீடியா பக்கத்தில் “ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா?” - என்ற தலைப்பில் காரசாரமான பதிவை வெளியிட்டுள்ளது.
அதில், “சென்னையின் குடிநீர்த் தேவையைத் தீர்ப்பதற்காக 2006ஆம் ஆண்டில் தி.மு.க அரசு நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்போது, உள்ளாட்சித் துறை முதலமைச்சராக இருந்த கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தத் திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து நிறைவேற்றினார்.
2021ஆம் ஆண்டு அவரே முதலமைச்சரான நிலையில், பெருகி வரும் சென்னையின் மக்கள் தொகையையும், விரிந்து வரும் சென்னை மாநகராட்சியின் பரப்பளவையும் கருத்தில் கொண்டு 24-02.2024 அன்று நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகுக்கான அடிக்கல்லை நாட்டி, தற்போது பணிகள் ஏறத்தாழ நிறைவடையும் நிலையில், இதனைப் பார்வையிட முதல்வர் விஜய் வருகிறார் என்கிற அற்ப காரணத்திற்காக, இரண்டாம் அலகு திட்டத்தின் கல்வெட்டை அகற்றியிருக்கிறது த.வெ.க அரசு.
ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் உருவாக்க வக்கில்லாத விஜய் அரசு, திராவிட மாடல் அரசின் முதல்வர் தொடங்கிய திட்டத்தின் அடிக்கல்லை அகற்றுவது அதன் பயபீதியையே காட்டுகிறது. முடிவடையும் நிலையில் உள்ள திராவிட மாடல் அரசின் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக, கல்வெட்டை அகற்றுவது வெட்கமாயில்லையா திறமையற்ற விஜய் அரசே?” என கடும் விமர்சனங்களும், கண்டனமும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆணவம் அழிவுக்கு வழி..! அவ்ளோ அவசரம் ஏன்..? அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்..!!