தென் மாநிலங்களின் அரசியல் உரிமைகளுக்கும் பிரதிநிதித்துவத்திற்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறைச் சட்டம் எந்த வடிவத்தில் கொண்டு வரப்பட்டாலும், அதனைத் திராவிட முன்னேற்றக் கழகம் நாடாளுமன்றத்தில் மிகக் கடுமையாக எதிர்க்கும் என்று திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி. திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் குறித்துக் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். மக்கள்தொகையைக் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களை நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் தண்டிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை அமையக் கூடாது. தென் மாநிலங்களின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் இந்தச் சட்டம் எந்த வடிவத்தில் வந்தாலும் திமுக அதனை ஒருபோதும் அனுமதிக்காது, கடுமையாக எதிர்க்கும்.

அதேபோல், மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில், தொகுதி மறுவரையறைப் பணிகள் முடியும் வரை காத்திருக்காமல், தற்பொழுது நடைமுறையில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையினுடைய அடிப்படையிலேயே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
இதையும் படிங்க: திமுகவின் நாடாளுமன்ற இருக்கை மாற்றம்..!! பின்னணி என்ன தெரியுமா..??
மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நாடு முழுவதும் தொடங்கியுள்ள சூழலில், தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தென் மாநிலங்களின் எம்பிக்கள் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவி வரும் வேளையில், திமுக எம்பி திருச்சி சிவாவின் இந்தத் திட்டவட்டமான பேச்சு அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: பாஜக கூட்டணியில் திமுக ஒருபோதும் சேராது! காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் திட்டவட்டம்!