தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மோசமடைந்து வருவதாகக் குற்றம்சாட்டி, ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசைக் கண்டித்து திமுக மகளிர் அணி அக்டோபர் 31 ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
தவெக ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, போதைப்பொருள் விற்பனை மற்றும் குழந்தைகள் கடத்தல் போன்ற குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக திமுக தலைமைச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வருவதற்கு முன் திமுக ஆட்சியில் நிலவிய சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை முன்னிலைப்படுத்தி தவெக வாக்குறுதிகள் அளித்த போதிலும், ஆட்சி மாறிய பிறகும் நிலைமை மேம்படவில்லை என்றும், மாறாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் அதிகரித்து தமிழகம் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'இனி போராட மாட்டோம் என எங்கும் கையெழுத்திடவில்லை': CJP அபிஜீத் தீப்கே ஆவேசம்!

மேலும், இத்தகைய குற்றச் செயல்களில் ஆளும் கட்சியினரே ஈடுபட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி வருவதாகவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் அரசு எவ்விதத் திடமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் திமுக குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நிலையை எதிர்த்து திமுக மகளிர் அணி சார்பில் வருகிற அக்டோபர் 31 சனிக்கிழமை காலை 10 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஒரே நேரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் தமிழக மக்களின் பாதுகாப்பு குறித்த கவலையை வெளிப்படுத்தும் வகையில் அமையும் என்றும், அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்து விவாதப் பொருளாக இருந்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சினையை தொடர்ந்து சுட்டிக்காட்டி வரும் நிலையில், திமுக மகளிர் அணியின் இந்த மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் அரசியல் அழுத்தத்தை அதிகரிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: அக்.10..!! இது ஒரு நீண்ட போராட்டமாக இருக்கும்!! டெல்லி போலீசுக்கு சவால்விட்ட கரப்பான்பூச்சி கட்சி..!!