முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தில், ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் நோக்கில் வழக்குகளைப் பதிவு செய்து வருவதாகத் தமிழகம் முழுவதும் பரவலாகப் பேச்சு உள்ளதாகவும், எங்கள் பக்கம் உள்ள நியாயத்தை நீதிமன்றத்தில் சட்டப்படி நிரூபிப்போம் என்றும் திமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அன்பில் மகேஷ் கைது குறித்துப் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட விவகாரத்தைப் பொறுத்தவரையில், பொதுவாக ஆளும் கட்சியாக இருப்பவர்கள் எதிர்க்கட்சியினரைப் பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறார்கள் என்ற பேச்சு தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக எழுந்துள்ளது. அந்த அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காகவே சில வழக்குகளைத் திட்டமிட்டுத் தொடுத்துள்ளனர். இருப்பினும், எங்கள் தரப்பில் முழுமையான நியாயம் இருக்கிறது என்பதை நாங்கள் நீதிமன்றத்தில் சட்டரீதியாக வாதாடி நிரூபிப்போம் என்றார்.
இதையும் படிங்க: #BREAKING: திமுக Ex. அமைச்சர் அன்பில் மகேஷ் அரெஸ்ட்..! முன்ஜாமீன் தள்ளுபடி... அதிரடி காட்டிய போலீஸ்..!!

தொடர்ந்து, திமுகவைச் சேர்ந்த மேலும் பல முன்னாள் அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், "அவ்வாறு வழக்குகள் தொடரலாம்; அது ஆளும் அரசாங்கத்தின் விருப்பத்தைப் பொறுத்தது" என்று சுருக்கமாகக் குறிப்பிட்டார்.
மேலும், அன்பில் மகேஷ் கைதைக் கண்டித்து திமுக சார்பில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் மாநிலம் தழுவிய போராட்டங்கள் ஏதேனும் முன்னெடுக்கப்படுமா என்று கேட்டபோது, "போராட்டங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எங்கள் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள்தான் ஆலோசித்து இறுதி முடிவு செய்வார்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சேலம் முதல் செஞ்சி வரை.! பட்டப்பகலில் தொடரும் கொலைகள்..!! CM விஜயை விளாசிய ஸ்டாலின்..!!