திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கட்சியின் இளைஞரணியை மேலும் பலமாக்கும் நோக்கில் இத்தகைய மண்டல அளவிலான சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு திருவண்ணாமலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வு திருவண்ணாமலை கலைஞர் திடலில் நடந்து முடிந்தது. வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த 29 கழக மாவட்டங்கள் மற்றும் 91 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் இருந்து சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்றனர். திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இந்நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிறப்புரையாற்றினர்.

திமுக இளைஞரணி 1980-ஆம் ஆண்டு மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்டு, கட்சியின் முதுகெலும்பாக விளங்கி வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் 5 லட்சம் நிர்வாகிகளும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய இளைஞர் அரசியல் அமைப்புகளில் ஒன்றாக இது திகழ்கிறது. இச்சந்திப்பு 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை திரட்டி, திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் அமைப்பதற்கான அடித்தளமாக அமையும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் அரசியல் களம்... தேர்தல் அறிக்கை குழு ரெடி... திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!
இந்த நிலையில் திருவண்ணாமலையை தொடர்ந்து திமுக இளைஞரணி அடுத்த மண்டல மாநாடு ஜனவரி 24ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. திருவண்ணாமலை தொடர்ந்து தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கான திமுக மண்டல மாநாடு நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் இரண்டாவது மண்டல மாநாடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது
.
இதையும் படிங்க: குனிஞ்சு கும்பிடு போட எதுக்கு அதிமுக பெயர்? நான் கேட்கலப்பா... அவங்கதான்..! முதல்வர் ஸ்டாலின் விளாசல்..!