டிட்வா புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த போதும், சென்னைக்கு அருகிலேயே நிலைக்கொண்டுள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. நேற்று காலை முதலே சென்னை முழுவதும் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கின. சாலைகள், சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கியதால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரஸ்மி சித்தார்த் ஜகடே அறிவித்தார். அதனையடுத்த் திருவள்ளூர் மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்திருந்தார். அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இன்று காலை முதலே தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதலே மழையானது நீடித்து வருகிறது. விழுப்புரத்தின் முக்கிய பகுதியாக இருக்கக்கூடிய திண்டியவனம், மரக்காணம், செஞ்சி மற்றும் விழுப்புரம் நகரப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் மற்றும் நெமிலி வட்டார பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: #Breaking வெளுத்து வாங்கும் கனமழை... நாளை இந்த 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...!
இதையும் படிங்க: விடாது வெளுத்து வாங்கும் மழை... சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? - வெளியானது முக்கிய அறிவிப்பு...!