வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. அக்டோபர் 21 முதல் 25 வரை தமிழகத்தின் சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், அக்டோபர் 21 முதல் 26 வரை இடியுடன் கூடிய மழை மற்றும் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது வானிலைத் துறையின் எச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.
இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விடிய விடிய மழை வெளுத்து வாங்கி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதுடன் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.நேற்று இரவு முதல் மாவட்டத்தில் நாகர்கோவில், குளச்சல்,தக்கலை, குலசேகரம் உட்பட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
இந்த மழை இன்று காலையும் நீடித்தால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாகப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேபோல் தென்காசி, திருப்பத்தூர், தூத்துக்குடி மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக, கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருப்பத்தூர் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.