அமலாக்கத் துறை (ED) அதிகாரிகள் இன்று காலை முதல் சென்னையில் 5 இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அமைந்தகரை, சூளைமேடு, நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடக்கும் இந்தச் சோதனை, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை, வரி ஏய்ப்பு, பணமோசடி புகார்களை மையமாகக் கொண்டது. ஏற்றுமதி-இறக்குமதி தொழில் செய்து வரும் தொழிலதிபர்களின் வீடுகளில் அதிகாரிகள் ஆவணங்கள், டிஜிட்டல் தரவுகள், பணம், நகை ஆகியவற்றைச் சரிபார்த்து வருகின்றனர்.
காலை 6 மணிக்கு மேல் தொடங்கிய சோதனை, CRPF பாதுகாப்புடன் நடைபெறுகிறது. ஒவ்வொரு இடத்திலும் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். லேப்டாப், மொபைல் போன், வங்கி ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்படுகின்றன. சோதனை முழுமையாக முடிந்த பின்னரே கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரங்கள் வெளியாகும் என்று ED வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தச் சோதனை, ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனங்கள் மூலம் பணத்தை வெளிநாட்டுக்கு அனுப்பி, வரி ஏய்ப்பு செய்ததாகவும், ஹவாலா பணப்பரிவர்த்தனை நடத்தியதாகவும் வரும் புகார்களின் அடிப்படையில் நடக்கிறது. கடந்த சில மாதங்களாக ED, தமிழகத்தில் பல தொழிலதிபர்கள் மீது விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்றைய சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ரூ.3,084 கோடி சொத்துகள் முடக்கம்! அனில் அம்பானியை இறுக்கும் அமலாக்கத்துறை! 
சோதனை நடக்கும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் கூடி நிற்கின்றனர். சோதனை மாலை வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ED அதிகாரிகள், "விசாரணை ரகசியமானது. முடிந்த பின் விவரங்கள் தெரிவிக்கப்படும்" என்று கூறினர்.
தமிழகத்தில் ED சோதனைகள் அவ்வப்போது நடப்பது வழக்கம். ஆனால், இன்றைய சோதனை பெரிய அளவில் நடப்பதால், அரசியல் வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சோதனை முடிந்த பின், புதிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அனில் அம்பானியை நெருங்கும் ED! பணமோசடி வழக்கில் இறுகும் பிடி! அரெஸ்ட் ஆரம்பம்!