சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் பள்ளத்தில் பெண் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சூளைமேட்டில் உள்ள வீரபாண்டி நகர் ஒன்றாவது தெருவில் மாநகராட்சி சார்பில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மழை காரணமாக தண்ணீர் தடையின்றி வெளியேற வடிகால் அருகே பள்ளம் தோண்டப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதன் அருகே தடுப்பு ஏதும் அமைக்கப்படாமல் வடிகால் பள்ளத்தின் மேல் மரப்பலகையை வைத்திருந்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் அந்தப் பள்ளத்தில் பெண் ஒருவர் தலைகீழாக கழுத்து எலும்பு உடைந்த நிலையில் கிடப்பதை நேற்று காலை 8 மணி அளவில் அந்த வழியாக நடந்து சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தவுடன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், உயிரிழந்தது 42 வயதான தீபா என்ற பெண் என்பதை கண்டுபிடித்தனர்.

இந்த நிலையில், மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும் மழைநீர் வடிகால்கள் குறித்து குற்றம் சாட்டியும், அக்கறையற்று நடவடிக்கை எடுக்காமல் இருந்த காரணத்தினால் இந்த உயிர் பலி நடந்திருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இதையும் படிங்க: அது உங்களுக்கே தெரியும்! தொண்டர்கள் கருத்தை பிரதிபலிப்பேன்… செங்கோட்டையன் சூசகம்
உயிரிழந்த பெண்ணின் உடற்கூராய்வு அறிக்கையில், சுமார் அரை மணி நேரம் அவர் உயிருக்குப் போராடியதாக வரும் தகவல்கள் பதை பதைக்க வைப்பதாகவும், நான்கரை ஆண்டுகளாக சதவீதக் கணக்கு போட்ட பொம்மை முதல்வர் அரசின் அமைச்சர்களும், சென்னை மேயரும் இந்த உயிரிழப்புக்கு சொல்லப்போகும் பதில் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
ஆண்டுதோறும் நடக்கும் இது போன்ற மரணங்களை ஒருபோதும் ஏற்கமுடியாது என்றும் இதெல்லாம் எந்த பேக்கேஜில் வரும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வாரா எனவும்., இப்படிப்பட்ட ஒரு அவல ஆட்சி இருந்து என்ன பயன்., அப்பாவி உயிர்கள் பறிபோவதை தடுக்க வக்கில்லை, வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை., மழை நீரும் வடிந்த பாடில்லை என்று சரமாரியாக சாடினார். தீபா உயிரிழப்புக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் இந்த அரசு உடனடியாக வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: செல்போன்ல கூட பேச முடியாதாம்! அதிமுக நிர்வாகிகளின் அழைப்பை ஏற்க மறுக்கும் செங்கோட்டையன்…