திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக சார்பில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக உற்சாகமாக பிரசாரம் செய்தார்.
திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் சீனிவாசன், நத்தம் தொகுதி வேட்பாளர் ரா. விசுவநாதன், வேடசந்தூர் தொகுதி வேட்பாளர் டாக்டர் பரமசிவம், நிலக்கோட்டை தொகுதி வேட்பாளர் தேன்மொழி, பழனி தொகுதி வேட்பாளர் ரவி மனோகரன், ஆத்தூர் தொகுதி வேட்பாளர் விஸ்வநாதன் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்திலும், ஒட்டன்சத்திரம் தொகுதி தமாகா வேட்பாளர் விடியல் சேகருக்கு தாமரை சின்னத்திலும் வாக்கு கேட்டு பேசினார்.

கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிமுகவை நேரடியாக எதிர்கொள்ள தைரியம் இல்லாமல், “இது தமிழகத்துக்கும் டெல்லிக்கும் இடையிலான தேர்தல்” என்று தவறான கருத்தை பரப்பி வருவதாக விமர்சித்தார். உண்மையில் இது திமுக ஆட்சியை மக்கள் அகற்றும் தேர்தல் என்று தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: அனல் பறக்கும் பிரச்சாரம்..!! முதல்வரை வம்பிழுத்து., வடிவேலு காமெடி சொல்லி சீறிப்பாய்ந்த இபிஎஸ்..!!
ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு முன்பு வேட்பாளரை அறிமுகப்படுத்திய பிறகு, “என்ன சின்னம்?” என்று கேட்டதாக சுட்டிக்காட்டிய அவர், “அவர்களின் சொந்த உதயசூரியன் சின்னம் கூட மறந்து போய்விட்டதா?” என்று கேள்வி எழுப்பினார். மக்கள் அன்றாடம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலையில், ஸ்டாலின் நடைபயிற்சி, டீ குடிப்பது, பளு தூக்குவது போன்றவற்றை புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்வதாகவும், ஐபிஎல் கிரிக்கெட் பார்த்து கருத்து தெரிவிப்பதாகவும் விமர்சித்தார்.
“ரோம் நகரம் எரிந்தபோது பிடில் வாசித்த நீரோவின் கதைபோல, மக்களின் துயரங்களை புறக்கணித்து கிரிக்கெட் ரசிப்பது நாட்டுக்கு தேவையா?” என்று கேள்வி எழுப்பினார். செல்வ செழிப்பில் வளர்ந்த ஸ்டாலினுக்கு மக்களின் பிரச்சினைகளில் உண்மையான அக்கறை இருக்காது என்றும், மக்களுக்காக சிந்திக்கும் ஒரே இயக்கம் அதிமுக மட்டுமே என்றும் வலியுறுத்தினார். ஸ்டாலின் தனது குடும்ப நலனை மட்டுமே முன்னிறுத்துவார் என்று குற்றம் சாட்டினார்.
மும்மொழி கொள்கை குறித்து ஸ்டாலின் பேசுவதை சுட்டிக்காட்டிய பழனிசாமி, “மும்மொழி கொள்கையை தமிழகத்துக்கு முதன்முதலில் கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான். அதை எதிர்த்து போராடிய திமுகவுக்கு இப்போது இது புரியவில்லையா?” என்று கேள்வி எழுப்பினார். திமுகவினரே தமிழகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டினார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சர் பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்களை வழங்கியதாகவும், திருவண்ணாமலை கோவிலில் மக்கள் பயன்படுத்த முடியாத 2 டன் வெல்லத்தை பரிசில் சேர்த்ததாகவும் குற்றம் சாட்டினார்.
கண்வலி கிழங்கு விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைக்காமல் சிண்டிகேட் அமைத்து தடுத்ததாகவும் தெரிவித்தார். இத்தகையவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரூ.8,000 கூப்பன் தருவதாக அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், “திமுக ஒருபோதும் ஆட்சிக்கு வராது. வந்தாலும் அந்த கூப்பன் பலனை திமுகவினரும், கமிஷன் பார்ப்பவர்களும்தான் அனுபவிப்பார்கள்” என்று கூறினார்.

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா மினி கிளினிக், அம்மா உணவகம், குடிமராமத்து திட்டங்கள் திமுக அரசால் முடக்கப்பட்டதாகவும், விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி மூலம் பயிர் கடனை இருமுறை தள்ளுபடி செய்த ஒரே அரசு அதிமுக மட்டுமே என்றும் நினைவூட்டினார். மின்கட்டணம், வீட்டுவரி, கடைவரி, குப்பை வரி உள்ளிட்டவை திமுக ஆட்சியில் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், மாநகராட்சி பிளான் அப்ரூவல் கட்டணம், கட்டுமானப் பொருட்களின் விலை (எம்சாண்ட், ஜல்லி, கம்பி, செங்கல், சிமெண்ட் உள்ளிட்டவை) இரு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளதாகவும் விளக்கினார்.
திமுக தேர்தல் அறிக்கையில் கட்டுமானப் பொருட்களை அத்தியாவசியப் பட்டியலில் சேர்த்து விலையை கட்டுப்படுத்துவதாக உறுதியளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.இறுதியாக, வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை (என்டிஏ) மக்கள் பெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: "தேர்தலுக்காக பாஜக எத்தகைய செயலையும் செய்யும்!" - அதிகாரிகள் மாற்றம் குறித்து டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சனம்!