எல்லோருக்குள்ளும் ஒரு குழந்தைத்தன்மை மற்றும் ரசிகன் இருக்கும் அல்லவா; 30 வருடங்களாகச் சிறு வயதிலிருந்தே முதலமைச்சர் விஜய்யைத் திரையில் பார்த்து வளர்ந்தவன் நான், இனிமேல் அவர் திரையில் வரமாட்டார் என்று நினைக்கும்போது அறியாமல் வந்த இயல்பான கண்ணீர்தான் அது என்று தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் அவர்கள் உருக்கமாகப் பதிலளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி மற்றும் மதுவிலக்குத் துறை உள்கட்டமைப்பு மேலாண்மை சார்ந்த புள்ளிவிவர விபரங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகளுடன் அமைச்சர் விக்னேஷ் தலைமையில் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விக்னேஷ், பல்வேறு கேள்விகளுக்கு விரிவான பதில்களை முன்வைத்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் விக்னேஷ் முன்வைத்த காரசாரமான வாதங்களின் புள்ளிவிவர விபரங்கள் பின்வருமாறு அரிசி விலை உயர்வு, காவிரிப் பிரச்சினை நிலவும் சூழலில் மதுவிலக்குத் துறை அமைச்சர் படம் பார்த்து அழுது நாடகமாடுகிறார் என்ற பிரேமலதா விஜயகாந்தின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. நான் அமைச்சராகி 2 மாதங்கள் ஆகின்றன. சிறு வயதிலிருந்தே தளபதியை ரசித்த எனக்கு, இனிமேல் அவர் திரையில் வரமாட்டார் என்று நினைத்தபோது ஏற்பட்ட உணர்ச்சி அது. இதை எதற்கு விவாதப் பொருளாக்குகிறீர்கள் எனத் தெரியவில்லை.
இதையும் படிங்க: 3 மணிநேரம் மட்டும் பொறுப்பை கழட்டி வைக்கணும்! 'ஜனநாயகன்' படத்திற்காக சிஎம்-மிடம் பர்மிஷன் கேட்ட அமைச்சர்!
மேலும், திண்டுக்கல்லில் சட்டவிரோதமாக 'சிலிங்' முறையில் மது விற்பனை செய்தால் 'க்யூ.ஆர் கோடு' (QR Code) மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, எந்த டாஸ்மாக் கடை மற்றும் டிப்போவில் இருந்து பாட்டில் வந்தது என்பது வரை துல்லியமாகக் கண்டறியப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 'ரெஸ்டோ பார்' மற்றும் துறை சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதங்கள் மட்டுமே நடக்கின்றன; மக்கள் வேண்டாம் என்று சொல்லும் எதையும் இந்த அரசு செய்யாது. துறையில் நடக்கும் கசிவுகளைத் தடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தொழிலாளர்களை ஒருமையில் பேசிய பேச்சு உரிமையோடு பேசியது, அது யாரையேனும் புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன். சிஐடியூ தொழிற்சங்கப் பொதுச்செயலாளருடன் நேரில் பேசி நல்ல முடிவு எட்டப்படும். முதலமைச்சரின் வழியில் இந்தத் துறையில் யாரையும் ஒரு ரூபாய் கூட திருட விடமாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் போதைப்பொருள் விற்பனை நடப்பது உண்மைதான்! பகிரங்கமாக ஒப்புக்கொண்ட தவெக அமைச்சர்!