கோயம்புத்தூர் எட்டிமடை பகுதியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணியின் இரண்டு நாள் பயிற்சி முகாமில் பங்கேற்ற பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, தமிழக அரசியல் சூழல் மற்றும் த.வெ.க தலைவர் விஜய்யின் கருத்துகள் குறித்துச் செய்தியாளர்களிடம் விரிவாகப் பேசினார். கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகளுக்குத் தலைமைத்துவப் பண்பு, சமூக ஊடகக் கையாளுதல் மற்றும் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்த பயிற்சிகளை வழங்க இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
த.வெ.க தலைவர் விஜய் களத்தில் இருப்பவர்களுடன் தான் போட்டி என்று கூறியது குறித்த கேள்விக்கு, "யார் யாருக்குப் போட்டி என்பது தேர்தல் நேரத்தில் தான் தெரியும்; இன்னும் இரண்டு மாதங்களில் அனைத்தும் விளங்கும்" என்று வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்தார்.
"மத்திய - மாநில அரசுகளின் குணாதிசயம் சரியில்லை என்றால் எனது குணாதிசயத்தைப் பார்ப்பீர்கள்" என்ற விஜய்யின் பேச்சுக்கு, "அவர் இன்னும் ஒரு தேர்தலைக்கூடச் சந்திக்கவில்லை; மக்களின் குணாதிசயத்தைப் புரிந்துகொள்ள அவருக்கு அனுபவம் தேவைப்படும் காலம் இது" என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: திருப்பூரில் பரபரப்பு: குப்பை அகற்றக் கோரி போராட்டம்: அண்ணாமலை கைது!!
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜய்க்கு 'புரட்சி தளபதி' பட்டம் வழங்கியது பற்றிப் பேசுகையில், "பட்டம் கொடுக்கவும் வாங்கவும் அனைவருக்கும் உரிமை உண்டு; ஆனால் அந்தப் பட்டம் தகுதியானவருக்குக் கொடுக்கப்படுகிறதா என்பதை மக்கள் தான் தீர்ப்பளிக்க வேண்டும்" என்றார்.
உதயநிதி ஸ்டாலினைச் சாடிய அவர், "கோபாலபுரம் குடும்ப வாரிசாகப் பிறந்ததைத் தவிர துணை முதல்வர் ஆவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? மூத்த தலைவர்கள் இவருக்கு நாற்காலி எடுத்துப் போடும் சூழல் தான் திமுக-வில் உள்ளது" என்று ஆவேசமாகப் பேசினார்.
எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றிய முதலமைச்சரின் கருத்துகள் குறித்து, "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் முதலமைச்சர் யாரைப் பார்த்தாலும் எதிரியாகப் பார்க்கிறார்; விமர்சனம் செய்பவர்களைக் கைது செய்வது தான் இன்றைய அரசின் நிலையாக உள்ளது" என்று குற்றம் சாட்டினார்.
பயிற்சி முகாம் மற்றும் உள்ளூர் பிரச்சனைகள்: மகளிர் அணியைத் தேர்தலுக்காகத் தயார்படுத்துவதுடன், அரசியலில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதே இந்தப் பயிற்சி முகாமின் நோக்கம் என்று அவர் தெரிவித்தார். மேலும், கோவையில் பூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் நடைபாதை வியாபாரிகளின் குறைகளைத் தீர்க்க திமுக அரசு தவறிவிட்டதாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: 2026 தேர்தலுக்கான வியூகங்கள் தயார்! பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தமிழகம் வருகை!!