சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 25 குழந்தைகளை கொன்ற இருமல் மருந்து விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததாக தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் தயார் செய்யப்பட்ட இருமல் மருந்து இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை தமிழக அரசு கண்காணிக்காததால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக குறிப்பிட்ட மருந்து நிறுவனத்தில் எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். கிட்னி விவகாரத்தில் எந்தெந்த மருத்துவமனைகள் ஈடுபட்டது என விளக்கமாக கூறி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பேரவையில் அமைச்சர் மழுப்பலாக பதில் அளித்ததாகவும் தெரிவித்தார். திமுக எம்எல்ஏவின் மருத்துவமனை என்பதால் கிட்னி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாகவும் கூறினார்.

கிட்னி முறைகேடு விவகாரத்தில் இடைத்தரகரை தான் கைது செய்திருப்பதாகவும், மருத்துவமனை மீதி நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து, திமுகவின் உருட்டு கடை அல்வா என பாக்கெட்டுகளை காண்பித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.
இதையும் படிங்க: சாதியப் பெயர்கள் நீக்கத்திற்கு கடும் எதிர்ப்பு... உயர் நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவு...!
அதனை அனைவருக்கும் கொடுத்தார். எடப்பாடி பழனிச்சாமி விநியோகித்த பாக்கெட்டுகளில் அல்வாவுக்கு பதில் பஞ்சு இருந்ததால் வாங்கியவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அல்வா என நினைத்தால் பஞ்சு தான் இருக்கும் என்பது போல திமுக வாக்குறுதிகள் ஆகிவிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார். திமுக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுரை மேயர் எடுத்த திடீர் முடிவு... ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முக்கிய தகவல்... பரபரப்பு காரணம்...!