தமிழக சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு அ.தி.மு.க.வில் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் வேகமெடுத்து வருகின்றன. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் நேரடி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் தோல்விக்கான காரணங்கள், அமைப்பு ரீதியான குறைபாடுகள் மற்றும் எதிர்கால அரசியல் வியூகங்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டங்களில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக காஞ்சிபுரம், உத்திரமேரூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் குறித்து அடிமட்ட நிர்வாகிகளின் கருத்துகளை நேரடியாக கேட்டு அறியும் முயற்சியாக இந்த சந்திப்பு பார்க்கப்படுகிறது.
கட்சியின் எதிர்கால வளர்ச்சி, உள்ளாட்சி தேர்தல் தயாரிப்புகள், அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த கூட்டங்களில் ஆலோசிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தேர்தல் தோல்விக்கான காரணங்களை தொகுதி வாரியாக ஆய்வு செய்து அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திட்டங்களும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: தேர்தல் அப்போ கொடுத்த பணம்?! எப்போ திரும்ப வரும்?! அதிமுக தலைமையிடம் வேட்பாளர்கள் போர்க்கொடி!

இதற்கிடையில், தேர்தல் தோல்வி குறித்து தி.மு.க.வும் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட கள ஆய்வு குழுக்கள் பல்வேறு மாவட்டங்களில் கருத்து சேகரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. நிர்வாகிகள் மற்றும் கட்சியினரிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் மற்றும் பரிந்துரைகள் ஆயிரக்கணக்கான பக்கங்களாக தொகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சில மாவட்டங்களில் நடத்தப்பட்ட கள ஆய்வின் போது சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் புகார் பட்டியல்கள் தனியாக தொகுக்கப்பட்டு கட்சி தலைமையிடம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றின் அடிப்படையில் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
ஒருபுறம் தி.மு.க., மறுபுறம் அ.தி.மு.க. என இரு முக்கிய கட்சிகளும் தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து அமைப்பு ரீதியான மாற்றங்களை நோக்கி நகர்வது, தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இடைத்தேர்தலுக்கு யாரை நிறுத்துவது? தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! கையை பிசையும் இபிஎஸ்!