ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேசினார். அப்போதும் கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தலை சந்திக்க முடியும் என கூறியதாகவும் ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்து விட்டதாகவும் தெரிவித்தார்.
நல்லாட்சி தமிழகத்தில் தருவதற்கு எல்லோரையும் அழையுங்கள் என்றும் வெளியே சென்றவர்களை நம் கழகத்தில் இணைத்துக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார். அப்படி செய்யவில்லை என்றால் அவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் எனவும் எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் 10 நாட்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்து இருந்தார்.

அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் ஏழு பேரை கட்சிக் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக நீக்கம் செய்துள்ளார். ஆனால், கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சியை தொடர்ந்து மேற்கொள்வேன் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். செங்கோட்டையனுக்கு ஆதரவாக முன்னாள் எம்பி சத்யபாமா இருந்து வருகிறார். அதன்படி செங்கோட்டையனுக்கு ஆதரவாக செயல்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா உள்ளிட்ட இதர நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதையும் படிங்க: அண்ணன் வாராரு! இபிஎஸ்-இன் அடுத்த கட்ட சூறாவளி சுற்றுப்பயணம்... முழு விவரம்...
இந்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக புறநகர் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் ராஜினாமா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது. கோபிசெட்டிபாளையம் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் செங்கோட்டையனுக்கு ஆதரவாக தங்களது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும் தெரிகிறது.
இதையும் படிங்க: எங்களையும் பதவியை விட்டு தூக்குங்க... எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஈரோடு அதிமுக டீம்...!